Saturday, February 10, 2018

மேகா 5





recap: மும்பையில் வசிக்கும் சுந்தர் சென்னையிலிருந்த வந்த மேகாவை விமான நிலையத்தில் பார்த்து, தன்னோடு தங்கிக்கொள்ள அடைக்கலம் தந்தான். அவளின் ஒவ்வொரு செயலிலும் ஈர்க்கப்பட்டும், காதல் கல்யாணம் என்று வாழ்க்கையின் ஓட்டத்தில் சேர்ந்துக் கொள்ளத் தயங்கினான். மேகா மும்பையிலிருந்து திரும்பிச் சென்று ஒருமாதத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மும்பை வந்து சுந்தரோடு தங்கினாள். காதலை வெளியில் சொல்லமுடியாது தவிக்கும் சுந்தர், காதலைச் சொல்லுவான் என்று எதிர்பார்த்தாளோ மேகா ?  மும்பையில் வேலை முடித்துக்கொண்டு சென்னைக்குக் கிளம்ப விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள்.

x-x-x-x-x

'சுந்தர் கெளம்பட்டா ?'
'இன்னும் அரைமணி நேரம் இருக்கே'
'மூன்று நாள்ல சொல்லாததை, இன்னொரு அரைமணி நேரத்துல சொல்லப்போறியா ?'
'என்ன ... சாரி ஹாப்பி ஜேர்னி'
'சொல்ல வேறவொண்ணுமில்லையா ?'
புரியாது பார்த்தேன், மெல்லச் சிரித்தாள்.

அவள் தோளில் தட்டிக்கொடுத்தேன்.

'சுந்தர்'
'...'
'ஆக்சுவலி எனக்கு மும்பைல வேலையேயில்லை, நான் சும்மா இது பெண்டிங் அது பெண்டிங் ன்னு சொல்லிட்டு வந்தேன்'
'ஓ, ஏன் ?'
'உன்னை பார்க்கணும்னு, உன்னோட பழகனும்னு'
'தேங்க்யூ'
' நான் வந்தது சுந்தருக்கு சந்தோசம் தந்ததா இல்லே ஒரு வித்தியாசமும் இல்லையா ?'
'சே, மேகாவை இரண்டாவது முறை பார்த்தது, பேசிப்பழகியது பரம சந்தோஷம்'
'அவ்வளவுதானா ?'

புரியாது பார்த்தேன்.

'எனக்கு சுந்தரை ரொம்பப் பிடிச்சிருக்கு'
'எனக்கும்தான் ... மேகாவை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு, ஐ ... லைக்  யூ'

லவ் யூ என்று சொல்ல விருப்பம் இருந்தும், தைரியம் இல்லை. லைக் யு ... லவ் யு என்ன வித்தியாசம் என்று கேட்டால் ... என்னிடம் பதிலில்லை.

'போகட்டா ?'
தயக்கம், பேசமுடியாது தடுமாற்றத்தில் இருந்தேன்.
'கிளம்பட்டா ?' என்னை அணைத்து கன்னத்தில் ஒரு முத்தம் தந்து, நடக்கத் தொடங்கினாள்.

'மேகா' மெல்ல அழைத்தேன், திரும்பாது நடந்தாள். மீண்டும் அழைத்தேன். குரல் வெளியே வந்தால்தானே, எனக்குள்ளே கதறிக்கொண்டிருந்தேன். உள்ளிருந்து கையசைத்தாள். புரியாது பார்த்துக்கொண்டிருந்தேன். திரும்ப கை அசைக்கவேண்டுமென்பதும் தெரியாது நின்றிருந்தேன். ஏன் நான் இப்படியிருக்கிறேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.

இதற்கெல்லாம் காரணமான ஃப்ளாஷ் பேக் கதையை … பயப்படாதீர்கள், சொல்லப்போவதில்லை. ஒரே ஒரு விஷயத்தைத்தவிர; என் சின்னவயதில், விவரம் புரியாத வயதில், ஏன் எதற்கு என்று ஏதும் தெரியாத வயதில், பலமுறை என் அன்னை என் கண்முன்னாலேயே அழுதிருக்கிறார்; தான் கல்யாணமே செய்திருக்கக்கூடாது என்று புலம்புவார். இந்தச் சொற்கள் தான் எனக்குள் பதிந்து கல்யாணம் என்பதையே வெறுக்கத் தொடங்கினேன்.

கொஞ்சநேரம் கழித்து, ஒருவாறு சமாளித்துக்கொண்டு, வீடு வந்து சேர்ந்தேன். அதற்குள் மேகாவிடமிருந்து 4 அழைப்புகளும், 2 'பை பை' செய்தியும், 3 'என்னாச்சி ?' செய்திகளும் வந்திருந்தன. தவறெல்லாம் என்னுடையதடி, எனை மன்னித்துவிடடி என்று சொல்லிக்கொண்டே, ஒரு நல்ல தூக்கம் எல்லாப் பிரச்சனைகளையும் புதுவழியில் சிந்திக்க உதவும் என்றெண்ணித் தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் அலுவலகம் சென்றேன். நான் அழைப்பேன் என்று அவள் காத்திருந்தாலோ, அவள் அழைப்பாள் என்று நான் காத்திருந்தேன். கொஞ்சம் ஒருவாறு அசுவாசப்படுத்திக்கொண்டு மேகலாவை போனில் அழைத்தேன்.

'ஹாய் சுந்தர்' மகிழ்ச்சியாகத்தான் பேசுவதாய்ப் பட்டது.
'சாரி மேகா, கொஞ்சம் என்னவோ குழப்பங்கள் ... சென்னை பத்திரமா போய்ச் சேர்ந்தாச்சா ?'
'ப்லைட் கிளம்பும்முன்னர் போன் ல கூப்பிட்டேன், வாட்ஸாப் மெசேஜ் எதற்கும் பதில் இல்லை'
'சாரிப்பா .... ரிப்ளை செய்ய … போன்ல என்னவோ பிரச்சனை … சாரி'
'என்னால எந்தப் பிரச்சனையுமில்லையே ?'
'சே, மேகா அருமையான ... ஐ மிஸ் யு, ரொம்ப'
'ஐ டு மிஸ் யு சுந்தர்'

இன்னும் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு போனை வைத்தேன். ஒருவாறு மனதில் நிம்மதியாய் இருந்தது, ஆனால் மேகாவை பிரிந்திருக்கமுடியாது என்ற உண்மையும் புரிந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே இருந்தேன். மாலையில் அலுவலகம் முடிந்து வீடு வந்து பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தும்போது பார்த்தேன், பூங்காவில் காகிதங்கள் காற்றில் பறந்தபடி இருப்பதையும், ஒருவர், யோகி என்று அழைப்போம் அவர் அவை ஒவ்வொன்றையும் ஓடிச்சென்று எடுத்துக்கொண்டிருப்பதையும் பார்த்து, நானும் இரண்டு மூன்று காகிதங்களைப் பொருக்கி அவரிடம் கொடுத்தேன்.

'நன்றி' யோகி பேசினார்.
'நீங்க தமிழ்ல பேசுறீங்க ?'
'உங்களுக்கு மராத்தி தெரியாதே' சிரித்தார், சிரித்தேன்.
'உங்களை இங்கே பார்த்திருக்கே, ஆனால் தமிழ் ன்னு தெரியாது … சுந்தர்' கை நீட்டினேன்.
'யோகேஷ்வர், யோகி ன்னு எல்லோரும் கூப்பிடுவாங்க, மதுரைல ஒரு பத்து வருஷம் இருந்தேன், அதான் தமிழ் தெரியும்'
அவர் கையிலிருந்த காகிதங்களில் இருந்த ஓவியங்களைப் பார்த்தேன். 'பாருங்க' என் கையில் தந்தார்.
மேலாலிருந்த ஓவியத்தை வாங்கிப் பார்த்தேன். என்னை ஈர்க்கவில்லை, திருப்பிக்கொடுத்தேன்.
'சுந்தருக்கு பிடிக்கலை போலிருக்கு'
'ஓவியத்துல அந்தப் பெண் ரொம்ப பயப்படறாங்க, இது ஆணா ? கையில குச்சி, ஒரு விளக்கு ? துன்பப்படும் படம், பாவம்'

யோகி சிரித்துக்கொண்டே 'உட்காரலாமா, நேரமிருக்கா ?' என்று கேட்க, பக்கத்துல இருந்த பெஞ்சில் இருவரும் அமர்ந்தோம்.

'நீங்க கொஞ்சம் குழம்பிப்போயிருக்கீங்களோ ?'
புரியாமல் பார்த்தேன்.
'ஒரு பக்கம் மட்டும் பார்த்துட்டு, இது தான், எப்பவும் இப்படித்தான் ன்னு நினைப்பீங்க போலிருக்கு'
'குழம்பத்துல தான் இருக்கேன், ஆனால் நான் சொன்னது தப்பா ?' அந்த ஓவியத்தை எடுத்து பெண்ணையும், ஆண் போல் தெரிந்த உருவத்தையும் காட்டினேன்.

'இந்த ஓவியத்தை வேற கோணத்துல பார்க்கலாமா ? '
'...'
'அதாவது சரியான கோணம் ?'

படத்தைத் தலைகீழாகத் திருப்பிக் காண்பித்து, 'இது ஒரு நீர்வீழ்ச்சி, மரக்கிளை, இங்கே காதலர்கள், குளிச்சிட்டு குளிர் நடுக்கத்துல, பக்கத்துல நெருப்பு குளிர்காய - ரொமான்டிக் சீன், நீங்க பிடிக்கலைன்னு சொல்லிட்டீங்களே' யோகி விளக்க புரிந்தது.

'சாரி தப்பா பார்த்து தப்பா புரிஞ்சிகிட்டு …'
'தப்பை சரிபண்ணிக்கிட்டா தப்பு தப்பேயில்ல'
'பட் நான் தப்பா சொன்னதும் ஒருவிதத்துல சரிதானே'
'நாம எப்படி எண்ணுகிறோமோ உலகம் நமக்கு அந்தமாதிரியே தெரிகிறது'

புரிந்தமாதிரி இருந்தும் அவர் பேசட்டும் என்று காத்திருந்தேன்.

'மகாபாரதத்துல ஒரு சின்னக்கதை வருமே, துரியோதனன் ஊர் சுத்திட்டு எல்லாரும் கெட்டவங்களாகவே இருக்காங்க ன்னு சொல்ல; அதுவே தருமன் அதே ஊரை சுத்திப்பார்த்துட்டு எல்லாரும் நல்லவங்களாகவே இருக்காங்க, அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் ஒருவனே மிகக் கெட்டவன் ன்னு சொன்னான் ... சுந்தர் கேள்விப்பட்டதுண்டா ?'

'அப்போ மேகாவோட பழகலாமா ? கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒன்னும் பிரச்சனை ஆகாதா ?'
'மேகா ... ஓ, உங்களோட ஒருசிலநாள் வந்து போனாங்களே, அவங்களா ?'

ஆம் என்று தலையாட்டினேன்.

'பார்க்கும்போது எனக்கொண்ணும் தப்பாத் தெரியலை'
'கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒன்னும் பிரச்சனை ஆகாதா ?'
'எதில்தான் பிரச்சனை இல்லை சுந்தர் ... இதோ இந்தக் கார் ... மூன்றாவது மாடில இருக்காரு, போனமாசம் பிரேக் பிரச்சனை, ஆக்சிடண்ட், அதுக்காக அவரு இந்த வண்டியை மீண்டும் எடுப்பதில்லையா ... பிரச்சனை வரும், தள்ளிப் போடாது எதிர்த்து நின்று சமாளிக்கணும், பயந்து விலகி, ஓட  ஆரம்பிச்சா சாகும்வரை ஓடிக்கிட்டே இருக்கணும், நிக்கவேமுடியாது'

பேசாதிருந்தேன்.

'கடற்கரைலேயே இருந்தா எல்லாக் கப்பலும் பத்திரமா தான் இருக்கும், பட் கப்பல் செய்வது கடற்கரைல கட்டிவைக்கறதுக்கா ?'
'டைட்டானிக் மூழ்கினாலும் இப்பவும் மக்கள் பயணம் செய்துக்கிட்டுதானே இருக்காங்க'
'ரொம்பச்சரி, நல்லதை நினைப்போம், நல்வழியில் சிந்திப்போம், நல்லதே நடக்கும்'

யோகியின் கால்தொட்டு வணங்கி, விடைபெற்று என் வீட்டிற்குள் நுழைந்தேன்.


[ மேகா ... இன்னும் வருவாள் ]

No comments:

Post a Comment