Tuesday, January 30, 2018

பொன்மாலைப் பொழுதில் 13

என் இனிய சிநேகிதா,
எதுவும் இன்னும் மறக்கவில்லையடா.
கோவிலில் எனக்காகப் பிரசாதம் வாங்கி வைத்திருந்ததும்
நீ அன்பாய்த் தந்ததாலேயே நான் அதிகமாய்த் தின்றதும்
தேவாரமோ திருவாசகமோ பிரபந்தமோ எப்போது கேட்டாலும் பொருள் விளங்க நீ சொல்லித்தந்ததும்
உன்னோடு அன்னம் உண்டதும்
உன் கை பிடித்தபடி ஊஞ்சல் ஆடியதும் ....
எதுவும் இன்னும் மறக்கவில்லையடா. என்னவோ ஏதோ போதாத நேரமென்றுதான் சொல்லவேணும்
நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்ல
கோபங்கொண்டு
இருவரும் இருவேறுதிசையில் செல்ல
சரி, எல்லாம் மறப்போம்
வேறுபாடுகளைக் களைவோம்
வெவ்வேறிடத்தில் வசித்திடினும் மனதால் இணைவோம்
நாளும் உன் நினைவினில் வாடும் இவ்வது
நலம் கேட்கிறேன் நல்வார்த்தை சொல்லிடு
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா?

***

மழை
இந்த மழை தான்
இதே மழை தான்
இந்த மழை நாளில் தான்...ஒருநாள்

அவளும் நானும்
எப்பொழுதும் போல்
ஊர் சுற்ற ஒன்றாய்க் கிளம்பினோம்
தனிமையில் ஓரிடம் கிட்டாதுப் புலம்பினோம்
எங்கள் பின்னே கருமேகக்கூட்டம்
பெருமழை பெய்ய வாய்ப்பு அதிகம்
சாலையின் ஓரத்தில்
சகுடியில் வேகும் சோளம் வாங்கினோம்
ஆளில்லா இடத்தினில்
அவசரமேயில்லாது ஊட்டி விளையாடினோம்
பரந்து விரிந்த கடலைக் கண்டோம்
பிள்ளையாய் மாறிக் குதித்து மகிழ்ந்தோம்
இன்னும் என்ன செய்யலாம் என்று எண்ணுகையில்
முன்னம் சொன்னது போல் மழை பொழியவே
அவள் திகைக்க நான் சிரிக்க
என்ன செய்வோம் என்றவள் வினவ
கண்ணால் நான் ஜாடை காட்ட
இரண்டு கைகளையும் X போல் வைத்துக் கொண்டு அவள் முறைக்க
*மழைவருது மழைவருது குடை கொண்டுவா, மானே உன் மாராப்பிலே* என்று நான் பாட

இந்த மழை தான்
இந்த மழையில் தான்
ஒருநாள்.


***

பார்க்கையில் பார்க்கிறாய்
சிரிக்கையில் சிரிக்கிறாய்
நலம் கேட்கிறாய்
நீ நலமா என்றால் கவிதையில் பதில் தருகிறாய்
என்ன அணிந்திருந்தாலும் அழகாய் வர்ணிக்கிறாய்
பிடிக்காது முறைக்கையில் காது மடல் பிடித்திழுத்து மன்னிப்புக் கேட்கிறாய்
இன்றென்ன நிறமென்று தினம் வினவுகிறாய்
பிறகு 'ஓ புடவை நிறத்தைச் சொன்னியா ?' என்று கேட்டு 'பக்கி' என்று திட்டவைக்கிறாய்
பூ வாங்கித் தருகிறாய்
புடவை பரிசு தருகிறாய்
சினிமா என்றால் சம்மதிக்கிறாய்
கோவிலென்றாலும் கூட்டிச்செல்கிறாய்
ம்ம்ம்
சொல்லவா ? சொல்லிவிடவா ?
மெதுவாகத்தான் ... மெதுவாகத்தான் ... எனை ஈர்க்கிறாய்

***

Thursday, January 18, 2018

பொன்மாலைப் பொழுதில் 12

தயாராய் இருக்கிறேன்
சேர்த்ததையெல்லாம் தந்து விட்டேன்
மன்னிப்பு கேட்டவரையெல்லாம் மறந்துவிட்டேன்
என் தவறை மன்னித்தவரை எண்ணி மகிழ்கிறேன்
வாசல் திறக்கப்போகிறது
வழி தெரியப்போகிறது
விழி பிதுங்கி வலியில் துடித்ததெல்லாம் இனி விலகி ஓடப்போகிறது
போட்டி இல்லை பொறாமை இல்லை
வஞ்சி எண்ணி ஏங்க வேண்டாம்
கொஞ்சிப் பேசிக் காத்திருக்கவேண்டாம்
சரி சரி உன் நிலை என்ன?
*நாளை உலகம் இல்லையென்றால்
அழகே நீ என்ன செய்வாய் ?*

***

உனை தினம் எண்ணி ஏங்கிக்கிடக்கிறாள்
உன் பல சில்மிசங்களை விரும்பி ரசித்ததை
மறக்க முடியாதுத் தவிக்கிறாள்
உன்னிடம் தனை இன்னும் இழக்கத்
தயாராயிருக்கிறாள்
உயிரென்று சொல்ல வேறாருமில்லை என்பதை
உனக்குணர்த்த விரும்புகிறாள்
உருகி உருகி நீ பழகியதெல்லாம் உண்மைதானா
என்றும் யோசிக்கிறாள்
உதறிச் செல்லவும் முடியாது ஒட்டி உறவாடவும் வழியில்லாது
வாடி நிற்கிறாள்
உன்னுள்ளும் இந்த உபத்திரவம் இருக்குமோ
என்றும் எண்ணுகிறாள்
உரிமை நிறைய உனக்குத்தந்தவள் ஞாபகம் இன்றாவது வராதா
என்றுத் தவிக்கிறாள்
வஞ்சி கெஞ்சிக் கேட்கும் வரம் கிட்டுமா
என்றுக் காத்திருக்கிறாள்
'கண்ணா வருவாயா ?' மீரா கேட்கிறாள்

***

பார்த்தாலே ஒரு பரவசம் பிறக்கும்
பார்த்துக்கொண்டேயிருக்கத் தூண்டும்

பொய்யும் புரட்டும் புரியாப் பருவம்
பொக்கவாய்ச் சிரிப்பே பதிலாய்த் தெறிக்கும்.

கெஞ்ச கொஞ்ச வேலை நடக்கும்
அதிகாரம் ஆடம்பரம் அர்த்தமற்றுப் போகும்

கைநீட்டி அழைத்தால் ஓடி வரும்
கன்னம் காட்டினால் முத்தம் தரும் 

பேசப்பேச ஆசை பிறக்கும்
பேசுவதேதும் புரியாதெனினும்
இன்னும் இன்னும் என்று கேட்கத் தூண்டும்

கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்கும்
எப்பொழுதும் ஏதாவதொரு கேள்வியிருக்கும்

குழந்தைகள் கடவுளின் பிம்பங்கள்
கூட அமர்ந்துக் கொண்டாடுங்கள்.

***

Friday, January 12, 2018

பொன்மாலைப் பொழுதில் 11

வளையல் அணிந்த வானவில்லா ?
தங்கத் தாமரையா ?
அங்கம் முழுதும்
தங்கமாய் ஜொலிக்கும் தாரகையா ?
ரம்பை ஊர்வசி போன்று
மண்ணில் மிதக்கும் மங்கையா ?
மயிலின் அழகும் குயிலின் குரலும் இணைந்தப்பதுமை
நீயொரு புதுமையா ?

பார்த்த விழி பார்த்துக்கொண்டே இருக்குதே
உனைப் பாராதிருக்க மனம் மறுக்குதே
எனக்குள் லட்சம் சிறகுகள் முளைக்குதே

கண்ணே
உனை நான் ... உனை நான் ... கண்டவுடன்


***

மழை வந்தால் குடையின் ஞாபகம்
குளிரும் பொழுது போர்வை ஞாபகம்
பசி எடுக்கையில் உணவின் ஞாபகம்
மயிலைப் பார்த்தால் தோகை ஞாபகம்
கோவிலுக்குள் வந்தால் பயபக்தி ஞாபகம்
ஏதோ நடக்கையில் மட்டும் தான் என்னவோ ஞாபகம் வருகிறது
ஆனால்
உன் நினைவு மட்டும் எல்லாப் பொழுதிலும்
மழையோ பனியோ
வெயிலோ இரவோ
மலரில் முகமும்
கனவில் தினமும்
வானவில்லிலும்
பாலைவனப் பயணத்திலும்
சாரக்காத்து வீசும் போதும்


***

நினைத்து நினைத்துப் பார்த்தேன்
நாம் ஒன்றாய் நடந்த கடந்தச் சாலைகள்
ஏறி இறங்கியக் கடைகள்
நின்று தின்று விளையாடிய இடங்கள்
கண்ணில் ஊதி மண் துரத்திய நிமிடங்கள்

நினைத்து நினைத்துப் பார்த்தேன்
ஒன்றாய்ச் சென்ற தீவாளித் தேடல்கள்
ட்ரையல் அறையில் சேர்ந்தே உடை மாற்றியப் பொழுதுகள்
கண்ணில் நீர் வரும் வரை சிரிக்கச் சிரிக்க பேசிய நாட்கள்

நினைத்து நினைத்துப் பார்த்தேன்
பாதி தின்று பாதி ஊட்டி விட்டத் தருணங்கள்
தேதி பார்த்துத் தலை கோதி விட்டத் தருணங்கள்
செலவு செய்ததென்று பொய்க்கணக்கு சொல்லியத் தருணங்கள்
பொய்க்கணக்கு என்று தெரிந்தும் முத்தம் தந்துக் கடன் அடைத்தத் தருணங்கள்

இன்னும் இன்னும் ......
ஓயாதக் கடலலை போல்
தேயாத நம் காதல் அலைகளை
நினைத்து நினைத்து பார்த்தேன்


***

அழகிலே நீயொரு அசுவம்
இந்த மண்ணில் நீயொரு அபூர்வம்
நீ கூட இருந்தால் என்னுள் ஒரு கர்வம்

நீ என் தவத்தின் வரம்
உன்னோடு பழகுதல் ஆனந்தம்
உன் பார்வையில் தெரியுது பரிசுத்தம்

உன்னால் என்னுள் நிசப்தம்
உன் நினைவுகளால் நிறையுமென் சித்தம்
தினந்தோறும் உன்நினைவலைகள் என்னை வந்து முட்டும்
நீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம்

***

Wednesday, January 3, 2018

பொன்மாலைப் பொழுதில் 10

இப்பொழுதெல்லாம் எண்ணம் எதுவாயினும்
அது பறந்து வந்துப் படுத்துக் கொள்கிறது அவளிடம்.

எப்படியோ என் உறக்கத்தினுள் புகுந்து
கனவுகளுக்கும் வர்ணமடித்து விடுகிறாள்.

இப்பொழுதெல்லாம் அவள் பெயரைச் சொன்னாலும் கேட்டாலும்
ஒரு பரவசம் பிறக்கிறது என்னுள்.

காத்திருக்கையில்
கருமேகத்தைக் காண்கையில்
மழையில் நனைகையில்
எல்லா சமயத்திலும் கவிதை சுரக்கிறது.
மென்மையான பாடல்களையே மனம் விரும்புகிறது.

இயற்பியல் கற்பிக்காததை அவள் இதழியல் கற்பிக்கிறது.
உயிரியல் உணர்த்தாததை அவள் உடலியல் உணர்த்துகிறது.
புவியீர்ப்பு விசையில் புரியாதது அவள் விழியீர்ப்பு விசையில் புரிகிறது.

காளையென் கர்வத்தை ஆற்றினாளே தன் வாஞ்சையில்
காதலின் தீபமொன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்


***

கண்ணா உனைப் பார்த்துக்கொண்டே காலை விழித்தெழுகிறேன்
நீ கண் மூடியதுபோல் நடிக்கையில் உடை சரிசெய்துக் கொள்கிறேன்.
தண்ணீர் வீணாக்கக்கூடாதென்று உன்னோடே குளிக்கிறேன்.
என் இடையில் எதையோத் தேடும் உன் விரல்களை மிரட்டி அனுமதிக்கிறேன்.
கவிதை என்று கண்டதையும் நீ சொல்வதை நாணத்தோடு கேட்டு ரசிக்கிறேன்.
சிரித்து சிரிக்கவைத்துப் பேசும் உன்னைப் பெருமையோடு சிநேகிக்கிறேன்.
பல அல்லல்களுக்கு மத்தியிலும் என் விருப்பத்தைக் கேட்ட உனை விரும்புகிறேன்.
இதுவரை மிரட்டி வந்த மார்கழிக் குளிரை  நக்கலாய்ப் பார்க்கிறேன்.
அமைதியாய் உன்னருகில் உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன்

***

அதாகப்பட்பது என்னவென்றால்
அழகியை ஒருநாள் கண்டு
அருகிலமர்ந்து பேசிச் சிரித்து
அகந்தை அற்ற அற்புதம் என்றுணர்ந்து
அக்கணமே அக்கினி முன்னமர்ந்து
அகமுடையாள் ஆக்க ஆசையிருந்தும்
அழகியின் சம்மதம் தெரியாது
அவசரப்படக்கூடாதென்று
ஆசைக்கு அணையிட்டு
அவளிடமிருந்து ஒப்புதல் வரும் வரை
ஆடை அணிகலன்
ஆடு ஆநிரை
அத்தனையும் வைத்துக் கொண்டு
அனுதினமும் காத்திருக்கிறேன்
அடியேன்,
அத்தமனம் ஆவதற்குள்
அவள் வருவாளா?