Wednesday, July 26, 2017

வயசாகிடுச்சே



அவள்,
அழகாய் இருப்பாள் என்று தனியாய்ச் சொல்லவேண்டுமா என்ன ?
அலுவலகத்தில், என் இருக்கைக்குக் கொஞ்சம் தள்ளி;

இன்று நீல நிறம், வேறு உடை,
ஆனால்
பக்கத்து இருக்கைப் பையனுடன்
அதே சிரிப்பு, பேச்சு, பேச்சு, பேச்சு;
நேற்று ஒருமாதிரி  பச்சை நிறத்தில் ஒரு ஆடை,
பக்கத்து இருக்கைப் பையனுடன்
சிரிப்பு, பேச்சு, பேச்சு, பேச்சு;
போன வாரமும் இதே கதைதான்.

நாளை அலுவலகத்துக்கு
என்ன நிற உடையில் வருவாள் என்று தெரியாது,
ஆனால் வந்தபின் என்ன செய்வாள் என்பது -
இப்பொழுது உங்களுக்குக் கூட தெரிந்திருக்கும் தானே.

என்னது ? நான் ஏன் அவளை நோட்டம்விடுகிறேனா ?
நீங்க மட்டும் உத்தமரா என்ன ?
வேறு பெண், வேறு நிறம், வடிவம்,
ஆனால் உற்றுநோக்குவது
 ஆண்களின் அடிப்படை உரிமை என்பது
தங்களுக்குத் தெரியாதா என்ன ?

பெறுவார் இல்லையேல் ஈவார்க்கு ஏது பெருமை ?

சரி சரி
நமக்குள் சண்டை வேண்டாம்,

என் சந்தேகமெல்லாம்,
இவர்கள் அப்படி என்னதான் பேசுவார்கள் என்பதைப் பற்றியில்லை,
வார விடுமுறை நாட்களில்
இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான்
என் கவலையெல்லாம்.

வயசாகிடுச்சே கலியபெருமாளே !

Monday, July 10, 2017

மாடிவீட்டு மங்கையர்



ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரியும்
எதிரில் பில்டிங்
ஐந்தாவது மாடி
மூன்று பெண்கள் வசிக்கின்றனர்;

பால்கனியில் அமர்ந்து டீ குடிப்பதும்,
புத்தகம் படிப்பதுபோல் பாவ்லா செய்வதும்,
தனித்தனியே வந்துநின்று
கைப்பேசியில் கதைகதைப்பதும்,

நன்றாய்ப் பொழுதுபோகும் ... எனக்கு

ஒருவாரமாய்
புதிதாய் ஒரு குடும்பம்,
கணவன் மனைவி மட்டும்;

காட்சி மாறினாலும்
கதை அதுவே.

முன்னம் சொன்னது எல்லாம் இப்பொழுதும் உண்டு,
 அத்தோடு இதுவும் உண்டு,

பால்கனியில் நின்றுகொண்டு
கூந்தல் வாறுவதும் சிக்கு எடுப்பதும்
பின் அந்த முடிக்கற்றைகளை
வெளியே வீசுவதும்,
விருட்டென்று உள்ளே மறைவதும்,

முடிக்கற்றைகள்
கீழ்வீட்டு மாடியில் விழுகுதா, இல்லை
நாலுமாடி மிதந்துசென்று
நடுவீதியில் விழுகுதா என்பது
காற்றின் வேகத்தைப் பொறுத்ததேயன்றி
வீசியவரின் தவறு இல்லை என்பதை அறிக.

Sunday, July 2, 2017

வெயில் அடுத்து மழை



செருப்புக் கடையில் சிலர்
நெருப்பு பறக்கும் சாணைக் கடையில் சிலர்

பழக்கடையில் பேரம்பேசியப்படி சிலர்
முழம் பூ வாங்கிச் சூடியப்படி சிலர்

அடிவாங்கி அழுதப்படிச் செல்லும் சிலர்
நெடியுணர்ந்து வழி மாற்றிச் செல்லும் சிலர் 

இவையெல்லாம் பார்த்து ரசித்தபடி நான்
இப்பொழுதெல்லாம் இப்படித்தான்

சம்மந்தமே இல்லாது கவிதை வருகிறது,
கடும் வெயிலைத்தொடர்ந்து பெய்யும் இம்மழை போலே.