Friday, December 30, 2016

வாழ்க புறா !






காத்திருக்கும்
திரைச்சீலை விலகும் ஓசை கேட்டிருக்கும்

இறக்கை விரித்து
இங்கும் அங்கும் பார்த்துக்கிடக்கும்
குக் .. குக் ... குக் ... என்று கூவிக்கிடக்கும் 


ஒன்றோடொன்று இறக்கையால் அடித்துக்கொள்ளும்
ஒன்றை ஒன்று கொத்தி சண்டையிட்டுக்கொள்ளும்



தீனி தூவும்முன் கைமேல் மோதி பயமுறுத்தும்
கொஞ்சம் நாம் கையுயர்த்தி ஒலியெழுப்பினால்
எல்லாம் ஒருசேரப் பறந்து விலகிடும்.



பின் மீண்டும் வந்து ஒவ்வொன்றாய் கொத்தித் தின்னும்.
கூட்டத்தில் ஒன்று எப்பொழுதும் மற்ற எல்லாவற்றையும்
கொத்தி விரட்டி அராஜகம் செய்யும்





இறைந்த உணவு காலியானபின் எல்லாம் பறக்க
ஒன்று மட்டும் தனித்து நிற்கும்



கூச்ச சுபாவமோ ?
இன்னும் கொஞ்சம் தீனி இரைத்தால் சத்தமின்றி தின்று பின் மறையும்.


 வாழ்க புறா !

Wednesday, December 14, 2016

நாய்



எங்கிருந்ததோ இத்தனை நாள்
எனக்குத்தெரியாது.
ஒருநாள் என்வீட்டு வாசலிலமர்ந்து
புல்லாங்குழல் ஊதிக்கொண்டிருந்தேன்.

சங்கீதம் வராது சத்தம் மட்டும் வந்தது அப்பொழுது.
(இப்பொழுதும் அப்படித்தான் என்கிறது என்சுற்றம்).

விரும்பிக்கேட்டவர்கள் யாருமில்லை.
விலகியோடியவர்கள் நிறைய உண்டு.

ஒருநாள்
எங்கிருந்தோ ஒரு குட்டி நாய் ஓடிவந்தது,
என் காலினருகே அமர்ந்துகொண்டது.

இரண்டு பிஸ்கட்ஸ் லஞ்சம் கொடுத்தேன்,
உண்டு விட்டு வாலாட்டியது.

தொட்டுக் கொடுத்தேன்.
நாவால் என் காலை வருடியது.

மெல்ல புல்லாங்குழல் எடுத்து ஊதினேன்.
கோபத்தில் கடித்துவிட்டால் என்னபண்ணுவதென்ற
பயம் தான்.


தன் தலை தூக்கி எனை ப் பார்த்தது.
'நானாடா இன்றுனக்கு?' எனக் கேட்பதுபோல் இருந்தது.
வாசிப்பதை (ஊதுவதை) நிப்பாட்டினேன்.

லொள் என்று ஒரு சத்தம்.

வாசிக்கவா இல்லை ஓடவா என்றெனக்குப் புரியவில்லை.
சும்மா இருந்தேன்.
அதன் முதுகில் தடவிக்கொடுத்தப்படியே
'வாசிக்கட்டா?' என்று கேட்டேன்.

மீண்டும் ஒரு லொள்.

'சரி' என்கிறதா இல்லை
'நோ' என்கிறதா என்றெனக்குப் புரியவில்லை.

மீண்டும் ஊதினேன்.
மீண்டும் லொள்.

நிப்பாட்டினால், இரண்டு முறை 'லொள் லொள்'.

மீண்டும் ஊதினேன்.
மீண்டும் லொள்.

இவ்வாறாய் எங்கள் சிநேகம்
தினம் வளர்ந்தது.

மாலை நேரம் ஆனதும்,
புல்லாங்குழலும் பிஸ்கட்டுமாய்
நான் படியில் அமர
அந்த நாய் என்னருகில் அமர

ஒரே கச் சேரி தான்.

எனக்கு க் கிடைத்த ஒரு பார்வையாளன் (ர்)

நான் வாசிக்க வாசிக்க
நாய் என் காலினுள் நுழைந்து நுழைந்து
ஓடி ஆட,
அதன் ஆட்டம் என்னை வாசிக்க உற்சாகப்படுத்த
என் வாசிப்பு நாய்க்கு உற்சாகமூட்ட
தினம் அங்கே நடந்தேறியது
குழ லாட்டக் கச்சேரி.
...
...
...
இதோ
மூன்று நாட்கள் ஆகிவிட்டது.
என் நாயைக் காணவில்லை.
புல்லாங்குழல் இசையும் எழவில்லை.

எங்கு போனதோ தெரியவில்லை.

எங்காவது நீங்கள்
என் நாயினைப் பார்த்தால்
சின்னதாய் இருக்கும், வெள்ளை நிறம்,
இரண்டு கறுப்புப் புள்ளிகள் மட்டும் உடலில்.
ப்ளீஸ்
இரண்டு பிஸ்கட்டுகள் வாங்கித்தரவும்.
வண்டி ஓட்டும்போது கவனமாய் இருக்கவும்.

உங்கள் சக்கரத்தில்
என் நாயுடனான நட்பு இறப்பதை
நீங்கள் விரும்பமாட்டீர்கள்
என்பது
எனக்குத்தெரியும்.

Wednesday, December 7, 2016

இடித்தவன்



'ஹலோவ்'
'சார் கீழேருந்து செக்யூரிட்டி பேசுறே சார்'

'கார்ல லைட் போட்டுட்டு வந்துட்டேனோ ? இல்லை தப்பா பார்க்கிங் ல வண்டிய போட்டுட்டேனா ? இல்லியே எப்போவும் பார்க் பண்ற இடத்துல தானே பார்க் பண்ணிருக்கே' பல்வேறு சிந்தனைகளோடு தொடர்ந்து பேசினேன்.

'சொல்லுங்க'

'சார் ஒங்க கார்மேல ஒருத்தரு இடிச்சிட்டாரு, சைடுல ஸ்க்ராட்ச் விழுந்துடுச்சி '

'அடடா, நா ...'

'அவரு பேசுறாரு சார் உங்ககிட்ட, ஒரு நிமிசம்'

'ஹலோவ், சார் நா அங்கே செகண்ட் ஃப்லோர்ல ஒர்க் இருக்கே, சாரி சார், லைட்டா இடிச்சிட்டே, சின்ன ஸ்க்ராட்ச் தான், நீங்க இப்போ கீழ வந்தீங்கன்னா ...'

'நா ஒரு மீட்டிங் கு இப்போ அவசரமா போய்கிட்டிருக்கே, இப்போ வரமுடியாது, நேர்ல வாங்க பேசிப்போ'

'சார் ஒங்க பேரு ?'

'ரவி, MIS பாக்குறே'

போன் துண்டிக்கப்பட்டது.

எனக்கு மீட்டிங் எல்லாம் ஒன்றுமில்லை. கீழே போக சோம்பேறித்தனம். சாயங்காலம் போகும்போது பாத்துக்கலாம் ன்னு சும்மா இருந்துட்டே. ஆனாலும் மனசுக்குள் ஒரு கவலை. 'காருக்கு அடி பலமாயிருக்குமோ ? சின்ன ஸ்க்ராட்ச் ன்னு தானே சொன்னா ? வரட்டும் பேசிப்போ' மனதுக்குள் துக்கம், வெளிகாட்டாது காத்திருந்தேன்.

எனக்குத் தெரியாத யாரைப் பார்த்தாலும் 'இவனா இடிச்சவன்?' ன்னு ஒரு எண்ணம். யாரு என்னை நோக்கி வந்தாலும் ஒரு பரபரப்பு. 'எப்படி இடிச்சா? வேகமாவா ? சாயங்காலம் வண்டி எடுக்கமுடியுமா?' கேள்வி மேல் கேள்வி மனதுள், ஆனால் இடித்தவனைத்தான் காணவில்லை இதுவரை.

'பேரு கேட்டுவச்சிக்கணும்னு எனக்குத் தோணலே, சரியான முட்டாள் நான்' பேசிக்கொண்டே தலையில் அடித்துக்கொண்டேன், பக்கத்தில் அமர்ந்திருந்தவன் ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.

மதிய நேரம் வந்தது. 'சாப்பிட போலாமா, அந்த சமயம் பார்த்து இவ வந்துட்டு போயிட்டான்னா என்ன பண்றது' என்ற நினைப்பு. காத்திருந்து, பசிக்க ஆரம்பித்து, வேகவேகமாய்ப்போய் கொண்டுவந்ததைக் கொட்டிக்கொண்டு திரும்ப என்னிடத்திற்கு வந்து, ரெஸ்ட் ரூம் கூடப் போகத்தோணாது, 'இடிச்சவ எங்கியோ இருக்கா, நா இப்டி கஷ்டப்படறேனே' ன்னு மனதுள் நினைத்துக்கொண்டேன்.

'வந்து பேசறே ன்னு சொன்னான் ல?' என்று என்னையே கேட்டுக்கொண்டேன். 'அப்போவே கீழபோயி யாருன்னு பாத்திருக்கணும், சே' என்று என்மேலேயே ஒரு கோபம். 'கண்டுபிடிக்கமுடியாதுன்னு தைரியமா? வரேண்டா வரே, நீ இந்த ஆபிஸ்ல எந்த மூலைல ஒளிஞ்சிருந்தாலும் ... ' என்று சிங்கம் சூர்யா மனசுக்குள்ள கத்திக்கிட்டு இருந்தாலும், நா என்னவோ சும்மா உட்கார்ந்த இடத்திலேயே தான் உட்கார்ந்திருந்தேன்.

மாலையும் முடிந்து வீடு செல்லும் வேலையும் வந்தது. இடித்த அவன் மட்டும் வரவில்லை. ஆறுமணி ஆனபின் கீழிறங்கிச் சென்றேன். எல்லாக் கடவுளையும் மனதில் துதிக்கொண்டே சென்றேன். எந்தத்தொந்தரவும் இல்லாது இன்று அருள்புரிய துதிக்துக்கொண்டேன். அடித்தவன் ஆளைக்காணோம், அடிவாங்கியவன் அரற்றுகிறேன் என்று எண்ணிக்கொண்டே, வண்டி என்னவாயிற்று, என்ன நிலையில் இருக்கு என்று முதலில் சோதித்தேன். பெரிய அடி இடி இல்லை என்று தான் தோன்றியது எனக்கு. 'கோவிந்தா அரோகரா நன்றி ஐயா' என்று சொல்லிக்கொண்டிருக்கையில் செக்யூரிட்டி அருகே வந்தார்.

அவர் என்ன கேட்கப்போறாரு என்று நான் எண்ணியிருந்தேனோ அதையே அவரும் கேட்டார்.

'சார் இடிச்சவரு வந்து பார்த்தாரா?'

'வரேன்னாரு, பாவம் அவருக்கு என்ன வேலையோ?'

'கட்டையா குண்டா இருந்தாரு சார், ஒங்களத் தெரியும் பேசிக்கறே ன்னு சொன்னாரு சார்'

'சரி விடுங்க நாளைக்கு வருவாரு ... பார்ப்போம்'

'நாளைக்குப் பாத்து பேரு நம்பர் வாங்கி வச்சிக்கவா சார்?'

'வேணா வேணா நா பாத்துக்கறே'

'என்னால ஒரு' தலைமுடியை மெதுவாக இழுத்துக்கொண்டே 'புடுங்கமுடியாது' என்றும் 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என்று மனதுள் நினைத்துக்கொண்டேன். காருக்கு அதிகம் சேதாரம் இல்லாம இருக்குதே அதுவே போதும் ன்னு எனக்கு எண்ணம்.

அடுத்த நாள் வந்தது. மறுபடியும் யாரைப்பார்த்தாலும் 'இவனா அவன் ? ... இவனா அவன் ?' என்ற எண்ணம். 'ப்ளீஸ் நீ வந்து என்னைப் பார்த்திரு கண்ணா, ஒன்னை ஒன்னும் சொல்ல மாட்டேன்' என்று எண்ணிக்கொண்டேன். ஆள் வந்தால்தானே.

மீண்டும் மாலையில் செக்யூரிட்டி 'வந்தாரா?' கேட்க மறுபடியும் 'இல்லை' என்று சொல்ல எனக்கு சரியாகப் படவில்லை. 'வந்து பார்த்தாரு, பெயிண்ட் பண்ணா இந்த ஸ்கராட்ச் போயிடும், அவரு பாதி பணம் தர்றேன்னு சொல்லிருக்காரு' என்று சொல்லிவைத்தேன். வேறு வழி ?

'அப்பா, என்னோட காரை இடிச்சவனே, ப்ளீஸ், நீ என்னை பார்க்கவேணாம், பேசவேணாம், காசு தரவேணாம், செக்யூரிட்டி உன்கிட்ட கேட்டா 'அவரை பாத்துட்டே' ன்னு மட்டும் சொல்லிடு ராசா.