Thursday, November 28, 2013

தெய்வத் திருநாமம்

பொருள் மேல் பித்தாகிப்
பொருளில்லா ஒரு பெயரைத் தன் பிள்ளைக்கு இட்டு
பின் புலம்பும் பேதை மனிதர்களே,
கேசவா’ என்று திருநாமமிட்டு அழையுங்கள்.
கெட்ட சொல் ஏதும் சூழாது அவன் காப்பான் நம்பிடுங்கள்;

ஆடைக்கும்
ஆரோ தரும் அணிகலன்களுக்கும் ஆசைப்பட்டு
அவன் நாமம் மறந்து, தன் சிறார்க்குப் பேரிட்டு, பின்னர்
அவதியுறும் அறிஞர்களே,
சிரீதரா’ என்றழைத்துச் சீராட்டுங்கள்.
சிக்கல் ஏதுமண்டாது அவன் காப்பான் நம்பிடுங்கள்;

உயிர் வாழப் பொருள் தருவோர்
உடன் உரைத்த வார்த்தையே பெயராய்ப் பொறித்து
உய்ய எண்ணும் உயர்ந்தோரே,
இறைவன் திருநாமமே
இன்னலைத் தீர்க்கும் என்றேனோ எண்ணாமல்
இன்று வரைத் திரிகிறீர் ?

மனிதனாய்
மண்ணுலகில் வாழ்ந்து
மடியப் பிறந்த மக்களுக்கு,
மனிதப் பெயரிட்டு அழைத்தால்
மறு பிறவியிலும் அவதியுற நேரிடும்.
மாதவா’ என்றே பெயரிட்டழைத்தால்
நாராயணன் நல்வழி நடத்திடுவான் நம்புங்கள்;

அசுத்தம் நிறைந்த
அழுக்கு உடலோடு
அவதரித்து அவதியுறப்போகும் அப்பிள்ளைக்கு,
அசுத்தம் நிறைந்த
அழுக்கு உடலோடு
அவதியுறும் ஒருவர் பெயரிட்டால்
அடுக்குமா ?
அக்குழந்தையை ‘கோவிந்தா’ என்றே திருநாமமிட்டு
அழையுங்கள்;
அனைவரையும் காத்திடுவான்,
அரங்கன் வழி நடந்திடுவான்;

தவம் செய்துப் பெற்ற பிள்ளைக்குத்
தரணி வாழ் தலைவர் பெயரிட்டால்
‘தப்பு செய்தோம்’ என வருந்த நேரிடுமே;
தாமோதரா’ என்றே
திருநாமமிட்டு அழைத்திட்டால், நம்
துயர் எல்லாம் துடைத்திடுவானே;

கண்ணுக்கு கண்ணாய்க் காத்துப் பெற்ற பிள்ளையை
மண்ணுக்குள் போகும் மனிதப் பெயரிட்டால்,
விண்ணைத் தாண்டிப் போகாது, மண்ணுள் மீண்டும் பிறப்பரே;
அதை விடுத்து, கார்முகில் வண்ணன் 'கண்ணன்' பெயரிட்டால்,
முன்னால் நின்றுக் காத்திடுவான், இது நிஜம்தானே;

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

கார்த்திகை தீபம் எரியட்டுமே
காரிருள் எல்லாம் மறையட்டுமே
அண்ணாமலையார் அருள் கிடைக்கட்டுமே
ஆனந்த வாழ்வு நிலைக்கட்டுமே.

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

Friday, November 15, 2013

சந்திரசேகராஷ்டகம்



சந்திரசேகரா, உன்னைச்
சரணடைந்தேன்;

சந்திரனைத் தலையிலும்,
செந்தழலைக் கையிலும் கொண்டவனே,
சொக்கத் தங்கம் போல்
ஜொலிக்கும் கைலாய மலையில் காட்சித் தருபவனே,
சங்கடம் அழித்து
சந்தோஷம் அளிக்கும்
சங்கரனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

தாமரை மலர் போன்ற
பாதங்களை உடையவனே,
வாசனை நிரம்பிய மலர்களைக் கொண்டு
பூஜிக்கப்படுபவனே,
நெற்றிக் கண்ணால் காமனை எறித்தவனே,
சாம்பலைத் தன் உடலெங்கும் பூசிக்கொள்பவனே,
அழிவில்லாதவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

பாகன் எனும் அரக்கனின்
பார்வையைப் பறித்தவனே,
பாம்புகளையே நகைகளாய் தரித்தவனே,
பார்வதி தேவி வலது பக்கம் அலங்கரிக்க அர்தநாரியாய் அருள்பவனே, பாயசமாய் விடத்தைப் பருகியவனே, தன்
பக்கத்தில் திருசூலத்தைச் சொருகியவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

நாரதராலும் மற்ற முனிவர்களாலும் புகலப்படுபவனே,
மூவுலகையும் காப்பவனே,
அந்தகாசுரனை அழித்தவனே,
அடியவர் கேட்பதை அளித்து
ஆனந்தத்தில் ஆள்த்துபவனே,
எமனை ஏதும் செய்ய முடியாது செய்தவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

கவலைகளைக் களைபவனே,
ஆபத்துச் சமயத்தில் அபயம் அளிப்பவனே,
ஆணவத்தால் ஆடிய தக்ஷனை
அழித்தவனே,
பாவங்கள் பற்றாது பார்த்துக்கொள்பவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

பக்தர்களின் புதையலே,
எல்லாவற்றிலும் முதலே,
அடையமுடியாதவைகளுக்கும் அப்பாற்ப்பட்டவனே,
எப்பாடுபட்டும் எவராலும்
புரிந்துகொள்ள முடியாப் புதிராய் நிற்பவனே,
புனிதமே,
ஐம்பூதங்களும் அடிபணியும் ஐயனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;

மூவுலகையும் படைத்துக் காத்து, அழித்தாள்பவனே,
எல்லாவற்றிலும் எல்லாக் காலமும் நின்று ஆட்டிவைப்பவனே,
எதற்கும் மூலமானவனே,
காத்திடு எங்களையே,
பணிகிறேன் உன் கழலே;