Friday, March 30, 2012

பாதச் சுவடுகள்

கடவுளைச் சந்தித்தேன் ஒருநாள்;
வாழ்க்கையில் நான் வாழ்ந்த,
கடந்து வந்த பாதையைக்
காண்பித்தார்;


எங்கும் எல்லா வழியிலும்
இரண்டு ஜோடி பாதச் சுவடுகள்;

உன்னோடு நான்
எப்போதுமிருந்தேன்;
உன்னை விட்டு ஒருபொழுதும்
விலகாது இருந்தேன்;
இதை உணர்த்தும்
இப்பாதச் சுவடுகள்;

விளக்கினார்;
வியந்து நோக்கினேன்;
கர்வமின்றிப் பேசினார்;
கண்ணீர் மல்க நன்றி சொன்னேன்;

ஓரிடம் மட்டும்,
ஒருஜோடி பாதச்சுவடுகள் மட்டும்;

ஐயனே, சிவனே
இங்கே மட்டும் ஒரு ஜோடி மட்டும்,
இது எந்த காலம் ?
வினவினேன் நான்;

இது உன் கஷ்ட காலம்;
வேலை இழந்து, வறுமையில் வாடியக் காலம்;
உன் பாவக்கணக்கு நீ சுமந்த காலம்;
அவமானப்பட்டு, அலைகழிக்கப்பட்டு
நீ வருந்தியக் காலம்;


சாந்தமாய்ச் சொன்னார் கடவுள்;
சத்தமாய்க் கத்தினேன் நான்;

சந்தோசமாய் நான் குதித்துத் திரிந்த வேளையில்
என்னோடு இருந்த நீர்,
சுக போகங்களில் உல்லாசமாய் நான் மகிழ்ந்தக் காலங்களில்
என்னோடு களித்த நீர்,
வெற்றி பெற்று நான் வாழ்வில் உயர்கையில்
என்னோடு வந்த நீர்,
எவ்வளவு பூசை உமக்கு செய்தேன்,
என் கஷ்ட காலத்தில்
என்னை விட்டுச் சென்று இருக்கீறே, இது ஞாயமா ?

சத்தம் கதறலாய் மாறியது;
என் கண்ணீர் துடைத்துச் சொன்னார் கடவுள்;

‘மகனே,
உன் கஷ்டக் காலம் முழுதும்
ஒரு பாதச் சுவடுகள் இருப்பது உண்மை தான்,
ஆனால் அது உன்னுடையதன்று !’


குழம்பிப் போனேன் நான்;
தொடர்ந்து சொன்னார் அவர்;

'உன் கஷ்டக் காலத்தில்
உன்னை சுமந்து கொண்டு வந்தேன் நான்,
நீ காணும் அந்தப் பாடச் சுவடுகள்
என்னுடையவை;
துயரக் கடலில்
நீ தத்தளிக்கும் காலத்தில்
நான் படகாய் இருந்து
உன்னைச் சுமந்து கரை சேர்த்தேன்'.


விளக்கினார் கடவுள்;
விவரமறிந்து வணங்கினேன் நான்;

நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை;
இறைவன் காட்டும் அன்பிற்கு அளவு இல்லை;

என்னை நீ நேசிக்கிறாயோ இல்லையோ
நான் உன்னை நேசிப்பேன்;
என்னை நீ நாடுகிறாயோ இல்லையோ
நான் உனக்கு உதவுவேன்;
உன்னோடு என்றும் இருப்பேன்;
உன்னை சுமந்து கொண்டு இருப்பேன்;


கடவுள் சொன்னார்;
கட்டியணைத்துக் கொண்டேன் நான்;

Wednesday, March 28, 2012

வளம் பெரும் அகம்

சிலது பின்னால் நன்றாயிருக்கும்
சிலது முன்னால் நன்றாயிருக்கும்
சிலது பின்னால் பார்த்தால் முன்னால் பார்க்கத் தூண்டும்
சிலது முன்னால் பார்த்தால் பின்னால் பார்க்கத் தூண்டும்
சிலது சகிக்காது;
சிலது பார்த்தாலே பரவசம்;

வளைந்தால் மனது பதறும்;
வர்ணம் வசீகரிக்கும்;
வாசம் வீசும்;

சிலது பார்த்தாலே படிக்கத்தோன்றும்;
சிலது பார்த்தாலே படுக்கத்தோன்றும்;
சிலது படித்துக்கொண்டே இருக்கத்தோன்றும்;
சிலது முடித்தபின் மீண்டும் படிக்கத் தோன்றாது;
சிலது வணங்க மட்டும், படிக்க முடியாது;

சிலது படிக்கையில் சிரிக்க வைக்கும்;
சிலது படிக்கையில் அழுக வைக்கும்;

நெட்டையாய்ச் சிலது
குட்டையாய்ச் சிலது
குண்டாய்ப் பலது

மொத்தத்தில் பலவிதம்
.........
.........
.........
புஸ்தகம்;
படித்தால் வளம் பெரும் அகம்;

Monday, March 26, 2012

பின்னால் பார்த்தே பழகி விட்டேன்

பின்னால் பார்த்தே பழகி விட்டேன்

எல்லாம் கடந்த பிறகு
ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கிறேன்;

இன்னும் இரண்டு நாள்
இருந்து விட்டு இறந்திருக்கலாமே;

முதுமைஎனினும்
மூச்சிருக்கே,
முனகிக்கொண்டே மூலையில்
முடங்கிக் கிடந்திருக்கலாமே;

மனைவி குழந்தை என்று
மகிழ்வோடு இருந்திருக்கலாமே;

தாவணி காண
தவமிருந்ததும்,
'தரை பார்த்து நடக்கும் அது
எனை பார்த்து சிரித்தது'
கவிதை எழுதிக் கிடந்திருக்கலாமே;

கட்டுப்பாடில்லாக் குதிரை போல்
காதலில் விழாது
சுற்றித் திரிந்த சுகம்
மாற்றாது இருந்திருக்கலாமே;

கல்லூரியில் காளையாய்
ஆடிப் பாடிய ஆட்டம்
ஆகலாதிருந்திருக்கலாமே;

பள்ளியில் படித்தது
கடவுளைத் துதித்து
கட்டுக்கோப்போடு
வாழ்ந்த வாழ்க்கை
விலக்காதிருந்திருக்கலாமே;

குழந்தையாய்க்
குறை ஏதுமில்லாது
குதூகலத்தோடு இருந்திருக்கலாமே;

தாயின் கருவரையில்
கண் திறவாது, மண்ணுலகில் பிறவாது
இருந்திருக்கலாமே;

எல்லாம் போன பிறகே
எண்ணிப் பார்க்கிறேன்;

எல்லாம் கடந்த பிறகு
ஏக்கத்துடன் திரும்பிப் பார்க்கிறேன்;

Thursday, March 22, 2012

ஏனடி ஏற்றுக்கொண்டாய் ?

          இன்னும் கொஞ்சம் பார்வைப் பரிமாற்றம்;
          இன்னும் கொஞ்சம் படபடப்பு;
          இன்னும் கொஞ்சம் காதல் கவிதைகள்;
          இன்னும் கொஞ்சம் காத்திருப்பு;
          இன்னும் கொஞ்சம் ஏக்கம், கனவு;
          இன்னும் கொஞ்சம் .....
          இன்னும் கொஞ்சம் .....
          
          ஏனடி என் காதலை
          இத்தனை சீக்கிரம்
          ஏற்றுக்கொண்டாய் ?