Monday, January 23, 2012

சிவபுராணம் - 7

                                    கேதர்நாத்


ஜோதிர்லிங்கத்தில் ஐந்தாவது
கேதர்நாத்.
வடஇந்தியாவில்
உத்தரகாண்டில்
உள்ள ஊர்,
பனி நிறைந்த இமாலயப்
பிரதேசத்தின் இடையே
அமைந்த ஊர்,
பழமையான,
பல வரலாறுகள் நிறைந்த ஊர்;

கேதார்நாத்,
சிவத்தலங்களில்
மிகப் புனிதத் தலம்
நடந்து மட்டுமே அடையக்கூடிய,
ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கக்கூடிய
அரியத் தலம்.
ஆதிசங்கரரால்
அமைக்கப்பட்டத் திருத்தலம்;
கௌரிகுந்த் என்ற இடத்திலிருந்து
மலையேறி
மகேஸ்வரனை
மனமுருகிக் காண வேண்டும்;

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்
போர் நடந்து முடிந்த சமயம்;
போரில் கொல்லப்பட்டோரினால் ஏற்பட்டப்
பழிக்குப் பரிகாரம் தேடிப்
பாண்டவர்கள்
பரமேஸ்வரனை நாடி இமாலயம் வந்தனர்;
பல நாட்கள் தேடி
அலைந்தனர்;
அவ்வமயம் வித்தியாசமாய் ஒரு எருது எதிர்பட,
அதன் பின் பாண்டவர்கள் ஓட,
அவ்வெருது
அவர்களிடம் அகப்படாது பூமியுள் புதைய, பீமன்
அதன் வால் பிடித்து இழுக்க,
எருது வால் விடுத்து,
தலையோடு மட்டும் நேபாளம் செல்ல,
அங்கே இந்த எருதுவின் தலையே
பசுபதிநாத் என்று அழைக்கப்பட,
வால் விட்டுச் சென்ற இடத்தில்
ஒரு லிங்கம் தோன்ற,
பரமேஸ்வரன் ஒளி ரூபத்தில் அங்கே
பாண்டவர்களுக்குக் காட்சி அளித்தார்; அவர்கள்
பாவங்கள் தீர்த்தார்;
என்னைக் காண வருவோர் பாவங்கள்
என்னால் தீர்க்கப்படும்
என்று வாக்குத் தந்தார்;

கேதார் என்ற
அவ்விடத்தில் தோன்றிய லிங்கம்
கேதார்நாத் என்றே அழைக்கப்படுகிறது;

எருதாய்த் தோன்றியச் சிவனோடு
சண்டையிட்ட பீமன்,
சிவன் மேல் கொண்ட பாசத்தால்
அவன் மேல் நெய் ஊற்றி வழிபட ஆரம்பித்தான்;
அன்று தோன்றிய
அந்தப் பழக்கம் இன்று வரை
நெய் ஊற்றி வழிபாடு தொடர்கிறது;

இவ்விடத்திற்கு
இன்னொரு கதையும் உண்டு;
நர-நாராயனாகத் தோன்றியத் திருமால்,
பத்ரிகாஸ்ரமத்தில் சிவனை வழிபட,
சிவன் அங்கே தோன்றி நலம் கேட்க,
அதைத் தொடர்ந்து வரம் தர,
மக்கள் வழிபட ஏதுவாக
மகேஸ்வரன் இங்கே இருக்கவேண்டும் என்றும்,
தன் சுய ரூபமான
ஜோதி வடிவில் விளங்க வேண்டும் என்றும்
வரம் கேட்க,
வரம் தந்தார்;
பத்ரிகாஸ்ரமம் இமாலயத்தில்
கேதார் என்ற சிகரத்தில் இருக்கிறது;
இங்கு தோன்றிய சிவம்
கேதார்நாத் என்ற அழைக்கப்படுகிறார்;


     நாவின்மிசை யரையன்னொடு
      தமிழ்ஞானசம் பந்தன்
     யாவர்சிவ னடியார்களுக்
      கடியானடித் தொண்டன்
     தேவன்திருக் கேதாரத்தை
      ஊரன்னுரை செய்த
     பாவின்றமிழ் வல்லார்பர
      லோகத்திருப் பாரே.
            ( சுந்தரர் - தேவாரம் )


                                                                        ( தொடரும் )

Wednesday, January 18, 2012

சிவபுராணம் - 6

                                    ஒம்கரேஸ்வர்


நர்மதா ஆறு
நாலு புறமும் சூழ,
மந்தாத எனும் இடத்தில்
மகேஸ்வரன் ஒம்கரேஸ்வரராக எழுந்தருளிய
இடமே ஜோதிர்லிங்கத்தில் 4 வது லிங்கமாகும்;

மந்தாத என்ற இவ்விடம்
சிவபுரி எனவும் அழைக்கப்படுகிறது;
நர்மதா ஆற்றில்
ஓம் எனும் வடிவத்தில்
அமைந்துள்ளது
இத் தீவு;

நாரதர் ஒரு முறை
விந்திய மலை வழி வர,
அப்பொழுது அம்மலை
என்னிடம் எல்லாம் இருக்கு,
கொஞ்சம் இங்கே தங்கு,
எனச்சொல்ல,
சுமேரு மலை உன்னோடுச் சிறந்தது,
ஏனெனில் அதில் தேவர்கள் வாசம் செய்கின்றனர்
என நாரதர் சொல்ல,

அடுத்த கணமே விந்திய மலை
அந்த ஈஸ்வரனை எண்ணிப் பிரார்த்திக்க,
ஈஸ்வரன் ஒம்கரேஸ்வரனாக
அங்கே தோன்றினார்.
அங்கேயேத் தங்கி
அருள்பாளிப்பதாய்
வாக்கும் தந்தார்;

இதுவும் தவிர
இன்னொரு கதையும் உண்டு;
இரவி குலத்தில் மந்தாத
இனத்தைச் சேர்ந்த
இரண்டு ராஜ குமாரர்கள்
அம்பரீஷ் மற்றும் முச்குந்த்
சிவனை எண்ணி கடுந்தவம் புரிந்த இடம்
என்பதால் இவ்விடம் மந்தாத என்று அழைக்கப்படுகிறது;

ஓடும் நர்மதையில்
ஒரு தீவில்
ஒய்யாரமாய்
ஒம்கரேஸ்வரர் அருள்பாலிக்க
ஒ ! மக்களே,
ஓடி ஓடிக் கலைத்தவர்களே,
ஒருநிமிடம் தரிசியுங்கள்,
ஓயாத்துயரெல்லாம்
ஒரு நொடியில் நீங்கும், உணருங்கள்.

                                                                        ( தொடரும் )

Tuesday, January 17, 2012

சிவபுராணம் - 5

                                    மல்லிகார்ஜுனா

ஒருமுறை கைலாயத்தில்
சிவ பார்வதியின் பிள்ளைகள்
கணேசனுக்கும்,
கார்த்திகேயனுக்கும், யார்
உயர்ந்தவர் என்ற
விசயத்தில்
வாக்குவாதம்
வந்துவிட, தன்
சந்ததிகளின்
சர்ச்சையைச் சமாளிக்க
பரமேஸ்வரன்
போட்டி ஒன்று அறிவிக்க, மூத்தத்
தனையன் கணேசன் அதில் வென்று
தானே வென்றதாக அறிவிக்க, இளையத்
தனையன் முருகன் கோபத்தில்
தனியே வாழ ஆரம்பிக்க,
சமாதானம் பேச வந்தோரிடமெல்லாம்
சம்மதம் இல்லாது பேசித் திருப்பி அனுப்ப,
சிவ பார்வதியையும் தன்னருகில் அனுமதிக்காது
தனிமையில் வாழ்கையில்,
முருகன் வாழும் மலையின் அருகில்
மகேஸ்வரன் தன் மனைவியோடு
வாழ்ந்து வந்தார்; இவ்விடமே
ஜோதிர்லிங்கத்தில் இரண்டாவதான
மல்லிகார்ஜுனா எனப்படும்;


                                    மகாகாலேஸ்வர்

சிப்ரா ஆற்றின் கரையில்
அமைந்தது
அவந்தி நகரம்;
அவ்வூரில் வேதப்ரியன் என்பவர்
வேதம் பயிற்றுவித்து
வாழ்ந்து வந்தார்;
அவரின் பிள்ளைகளும்
அவரோடு வாழ்ந்து வந்தனர்;
அவந்தி நகரின்
அருகிலே ரத்னமாலா என்ற மலையில்,
அரக்கன் ஒருவன் வாழ்ந்துவந்தான்;
அவன் பெயர் துஷாணன்;
வேதம் வகுத்த பாதை வழி
வாழ்பவர்களைக் கண்டால்
வீரம் கொள்வான், அவர்களை
விரட்டி அடிப்பான்;
வேதப்ரியன் பற்றி அறிந்த
துஷாணன் அவர்கள் இருப்பிடம்
வந்தான்;
வேதம் மற இல்லை நான்
கழுத்தை நெறிப்பேன், இற;
பயமுறுத்தினான்,
பயப்படாது நின்றனர்,
தீயவன் தூயவர்களைக்
கொல்லத் துணிந்தான்;
அப்பொழுது ஒரு சத்தம்,
வேதப்ரியன் வணங்கி வந்த
லிங்கத்திலிருந்து
லிங்கேஸ்வரன் தோன்றினார்;
துஷாணனை எரித்தார்;
வேதப்ரியனும் அவன்
பிள்ளைகளும், சிவனை
இங்கேயே என்றும் தங்கி இருக்க வேண்ட,
சிவனும் சம்மதித்து
அருளாசி வழங்கும்
அந்த இடம் தான்
ஜோதிர்லிங்கத்தில் மூன்றாவதான
மகாகாலேஸ்வர் ஆகும்.




                                                                        ( தொடரும் )

Monday, January 16, 2012

சிவபுராணம் - 4

                                    சிவ - பார்வதி திருமணம்


சிவன் சப்தரிஷிகளை அழைத்தான்;
தன் சார்பாய்த் திருமணம் பேச
பார்வதியின் பெற்றோரிடம்
அனுப்பி வைத்தான்;
சிவ பார்வதி திருமணத்தை
பெற்றோர்கள் அங்கீகரித்தனர்;
திருமண நாள் காலை
கந்தர்வர்கள் பாட
அப்சரஸ்கள் ஆட
அனைத்து தேவர்களும்
சிவனோடு திருமண மண்டபம் நோக்கிச் செல்ல,
பிரம்ம தேவன் முன்னிலையில்
திருமணம் இனிதே நடந்தேறியது;
சிவனும் பார்வதியும்
கைலாயம் திரும்பினர்;

சிவனுக்கும் பார்வதிக்கும்
பிள்ளையாய்ப் பிறந்த
முருகன், தரகாசுரனை
அழித்து தேவர்களைக் காத்தான்;

                                    சந்திரனின் சாபம்

தக்ஷனின் பெண்களில் 27 பேரைச்
சந்திரன் மணந்து கொண்டான்;
அவர்களில் அழகான ரோகினியை
சந்திரன் மிகவும் நேசித்தான்;
இதன்மூலம் மற்ற மனைவியரின்
கோபத்தைப் பெற்றான்.
இதுபற்றி தக்ஷன் பலமுறை எடுத்துக்கூறியும்
சந்திரன் செவி சாய்க்காதிருந்தான்.
'மற்ற மனைவியரை நீ
மறந்ததால்
மெதுவாய் நீ வானிலிருந்து
மறைந்து போவாய்'
தக்ஷன் சாபம் தர,
சந்திரன்
சாபம் தீர பிரம்மனிடம் ஆலோசனை கேட்க,
சிவனை நோக்கி பிரம்மன் விரல் காமிக்க,
சந்திரன் பிரபாச தீர்த்தம் சென்று,
சிவலிங்கம் ஒன்றை நதிக்கரையில் செய்து,
சிவனை எண்ணி வழிபடலானான்.
சிவன் வந்தான்;
சந்திரன் துயர் துடைக்க வழி சொன்னான்;
'கிருஷ்ணபக்ஷத்தில் நீ ஒளி குறைந்து மறைந்து,
சுக்லபக்ஷத்தில் ஒளி மிகுந்து விளங்குவாய்'.
சங்கரன் சொன்னான்,
சந்திரன் மகிழ்ந்தான்;

சந்திரன் வடிவமைத்து வழிபட்ட அந்த
சிவலிங்கமே, ஜோதிர்லிங்கத்தில் முதன்மையான
சோமநாதராகும்;

                                                                        ( தொடரும் )

Friday, January 13, 2012

சிவபுராணம் - 3

வரம் பெற்றவன்
வலிமை பெற்றவனானான்;
மூஉலகையும் ஆட்டிப் படைத்தான்;
வரம் தந்தவன்
செய்வதறியாது திகைத்து நின்றான்;
அச்சமயம்
சிவன் இமயமலையில் தவத்தில் இருந்தான்;
பார்வதி தன் பெற்றோரோடு
இமயமலையில் வசித்து வந்தாள்;
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க
காதல் வயப்பட
காமனைப் பணிந்தான் இந்திரன்;
காமன் வந்தான்;
சிவன் இருப்பிடத்தை அழகாய் அமைத்தான்;
அவ்விடம் பார்வதியை வரவழைத்தான்;
கணை விடுத்தான்;
கண் திறந்தான் சிவன்;
நடந்ததை அறிந்தான் அவன்;
சினம் கொண்டான்;
நெற்றிக்கண் திறந்தான்;
காமனை எரித்தான்;

காமன் மனைவி ரதி தேவி;
கண்ணீர் விட்டுக் கதறினாள்;
கணவன் செய்தப் பிழையைப்
பொருத்தருளப் பணிந்தாள்;
தேவர்கள் வந்தனர்;
தரகாசுரனால் நேரும்
துயர் தீர்க்கவே
தங்கட்கு சினம் தரும் செயல் செய்ய நேர்ந்தது,
தயை கூர்ந்து சினம் தணிந்து
காமனை உயிர்ப்பித்து எம்மெல்லோரையும்
தரகாசுரனிடமிருந்துக் காத்தருள்புரிய வேணும்;
இமையோர் வேண்டினர்;
இரங்கினான் ஈஸ்வரன்; எனினும்
இறந்த மன்மதன் இறந்தவனே;
துவாரகையில்
கிருஷ்ணனுக்கு மகனாய்
பிரத்யும்னனாய்
பிறப்பான் என்றான்
பரமேஸ்வரன்;

                                    பார்வதி தவம்


சிவனை மட்டும் தன்
சிந்தையில் கொண்டு வேறேதும்
சிந்திக்காது
தவம் செய்யப் புறப்பட்டாள்;

வசதியான வாழ்வைத் துறந்தாள்;
பட்டு, தங்க நகைகள் துறந்தாள்;
தாய் தந்தை துறந்தாள்;
உணவு உறக்கம் துறந்தாள்;

சிவனையே கணவனாய்க் கொள்ள
கடுந்தவம் செய்தாள்;

சிவன் ஒரு பிராமண வடிவில்
அவள் முன் தோன்றினான்;
பார்வதி அவரை வரவேற்றாள்;
வணங்கினாள்;
கடுந்தவம் செய்யக்
காரணம் என்ன,
வினவினார் வந்தவர்;
விடைதந்தாள் வணங்கி நின்றவள்;
பரமேஸ்வரனே என்
பதியாய் வரத் தவமிருக்கிறேன்,
பார்வதி சொன்னாள்;
பிராமண வடிவெடுத்து வந்தவர்
பலமாய்ச் சிரித்தார்;

முட்டாள் பெண்ணே,
தங்கத்தைத் தந்துத்
தகரத்தை வாங்கிவோர் உண்டா ?
சந்தனத்தைக்
களி மண்ணில் கரைப்பாரா யாரும் ?
கண்ணுக்கழகாய்க்
கண்ணெதிரே தேவர்கள் பலரிருக்க
கானகத்தில் எங்கோ
கண் மூடி அமர்ந்திருக்கும்
அவனா,அச் சிவனா,உனக்கேத்த ஆள் ?
சாம்பல் உடம்பெங்கும் பூசி,
சடையாய் முடி பரவிக் கிடக்க,
பாம்பு மாலையாய் கழுத்தில் கிடக்க,
பூதங்கள் உடனுரங்க,
அவனா உனக்கு ?
அறிவிருக்கா உனக்கு ?
வாழ்வை வீணாக்காது,
வாழப் பழகு; அவ்வாறு
வாழ்வதே உலக மரபு;

கொதித்தெழுந்தாள் பார்வதி;
கோபத்தோடு பேசினாள்;
சிவம் பற்றித் தெரியாத
நீர் ஒரு ஜடம்;
நீர் தான்
அறிவில்லாத முடம்;
கிளம்பிச் செல்லும் வேறு இடம்;

பார்வதி
பிராமணன் இருப்பதை மறந்தாள்;
தன் வேலை தொடர்ந்தாள்;
சிவனை எண்ணித் தியானம் செய்தாள்;

பிராமண வடிவெடுத்து வந்தவன்,
பரமேஸ்வரனாய் மாறி நின்றான்,
பார்வதியின் தவத்தை மெச்சினான்,
வரம் கேட்கச் சொன்னான்;
பதியாய் வந்து, தன்னுள்
பாதி கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள்;

                                                                        ( தொடரும் )

Thursday, January 12, 2012

சிவபுராணம் - 2

                                    படைத்தல்

படைக்கும் தொழிலைத்
தொடங்கினார் பிரம்மா;
படைத்தார் ரிஷிகளை,
அவர்கள் ஆயினர் கர்தமா, தக்ஷ மற்றும் மரீசி;
மரீசீயின் மகன்
காஷ்யப்பா;
தக்ஷனின் புதல்விகளை
காஷ்யப்பா மணந்து கொள்ள
அவர்களின் பிள்ளைகள்
அமரர்களாகவும்,
அரக்கர்களாகவும்
ஆனார்கள்;

இதையும் தொடர்ந்து
இன்னும் படைத்தார்,
மரம், செடி, கொடி,
மலை, ஊர்வன, பறப்பன என
பல உயிரினங்களையும்
படைத்தார்;
தக்ஷனின் மகள் சதி;
ருத்ரன், சிவனின் இன்னொரு வடிவம்
இமாலயத்தில்
தவம் செய்து வந்தார்,
சதியை மணந்தார்;
தக்ஷனுக்கும் ருத்ரனுக்கும்
தகராறுதான் எப்பொழுதும்;
இருவரும் ஒருவரை ஒருவர்
வெறுத்து வந்தனர்;
ஒருமுறை தக்ஷன்
ஒரு யாகம் செய்தான்;
சிவனை அழைக்காது
செய்யப்பட்ட வேள்விக்கு
சதி வந்தாள்;
அழைக்காமல் வந்ததால்
அவமானப்பட்டாள்;
தன் உயிர்நீத்தாள்;
ஆத்திரமடைந்தான் ருத்ரன்;
தக்ஷனின் வேள்வியை அழித்தான்;
அவ்வேள்விக்கு வந்தவர்களை
அழித்தான்;
ஆத்திரம் தணிந்தபின்
ஆருயிர் நீத்தவர்கள், பிழைத்தார்கள்;
சதி மட்டும்
பர்வதங்களின் அரசனுக்குப்
பெண்ணாய்
பார்வதியாய்ப் பிறந்தாள்;

                                    தாரகாசுரன்

தரகன் என்ற அசுரன்;
கடுந்தவம் புரிந்தான்;
பிரம்மன் அவன் முன் தோன்றினான்;
உன்னால் படைக்கப்பட்ட
எதனாலும்
எனக்கு அழிவு கூடாது என்றும்
சிவனுக்குப் பிறக்கும் பிள்ளை தவிர
வேறெவராலும் எனக்கு அழிவு கூடாது என்றும்
வரம் கேட்டான் அசுரன்;
வரம் தந்தான் பிரம்மன்;

                                                                        ( தொடரும் )

Wednesday, January 11, 2012

சிவபுராணம் - 1


                                    முன்னுரை

மும்மூர்த்திகள்,
பிரம்மன் படைக்க,
பரந்தாமன் மகா விஷ்ணு
படைத்ததைக் காக்க,
பரமேஸ்வரன்
படைத்ததன் பணி முடிவடைந்ததும் அழிக்க
இவ் பூலோகம்
இவ்வாறாய் இயங்கி வருகிறது
இனியதாய்;

இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை
இனி அனுதினமும்
படிப்போம்;
படித்ததை ரசிப்போம்;
ரசித்துப் படித்ததைப் பாடி
பரமேஸ்வரன் அடி தொழுவோம்;
பரவசம் அடைவோம்;


     நமச்சிவாய வாழ்க
     நாதன்தாள் வாழ்க
     இமைப் பொழுதும் என்நெஞ்சில்
     நீங்காதான் தாள் வாழ்க.


நமசிவாய மந்திரத்தின் மூலமானவன் வாழ்க;
அவன் திருவடி வாழ்க;
ஒரு நிமிடமும் என் நெஞ்சிலிருந்து நீங்காத
அவன் திருவடி வாழ்க;

எப்பொழுதும் போல்
இப்பொழுதும்
இதில் ஏதும் பிழை இருப்பின்
தெரிந்தவர் சொன்னால்
திருத்திக்கொள்ளப்படும்;

                                                                        ( தொடரும் )