Friday, September 30, 2011

அருள் தரும் அய்யப்பன் - 6

                                    குருகுலம்

கல்வி கற்கும்
காலம் வந்தது;
காவலன் அதற்கேற்ற
காரியம் ஆற்றினான்;

குருகுலம் சென்றான்,
கல்வி கற்றான்,
கல்வி கற்பவன்
கடவுள் அம்சம் என்று
கற்றுத் தருபவன்
கண்டு கொண்டான்;


கற்ற கல்விக்கு தட்சணையாக
கண்ணில்லா பேச முடியா தன் பிள்ளைக்கு
கண் பார்வையும், பேச சக்தியும் அளிக்குமாறு
குரு வேண்ட,
கேட்டதைக் தந்து
அருள் பாலித்து
அரண்மனை வந்தடைந்தான்
ஆண்டவன் வம்சமான
அந்த மணிகண்டன்;


இதற்கிடையில்
இராணிக்கு ஒரு குழந்தை பிறந்தது;

மூத்த பிள்ளை
மணிகண்டனுக்கே
மணி முடி என்று
மன்னன்
முடிவு கட்ட,
மன்னனின் மனைவியின்
மனதை மாற்ற திவான்
முனைந்தான்;



அரசிக்குப் பிறந்த பிள்ளைக்கே
அரியாசனம் என்று
ஆசை காட்டினான்;
ஆரோ எங்கிருந்தோ வந்த
அந்த மணிகண்டன்
அரியாசனம் ஏறினால்
அரசி உன் மகன்
அவன் காலடியில் கிடந்து
அல்லாட நேரிடும் என்று
அச்சுறுத்தினான்;

                                                                        ( அருள் தொடரும் )

Thursday, September 29, 2011

அருள் தரும் அய்யப்பன் - 5

அரசன் ஆண் மகவைப் பார்த்தான்;
அசையாது செய்வதறியாது நின்றான்;
அங்கோர் முனிவர் தோன்றினார்;

'மன்னா, உன் புத்திர சோகத்திற்கு
முற்று புள்ளி வை;
உன் கையில் இந்த மகவை வை;
மணியோடு பிறந்தவனுக்கு
மணிகண்டன் என்று பெயர் வை;
மகவின் அகவு பன்னிரண்டு ஆகும் வரை
மனதில் பொறுமை வை;
அதன் பின்
அனைவர்க்கும் புரியும்
அவன் பெருமை;'

முனிவர் மறைந்தார் புன்சிரிப்போடு;
மன்னன் அரண்மனை திரும்பினான் அக் குழந்தையோடு;

அளவற்ற மகிழ்ச்சி கொண்டான்;
அக் குழந்தையை தன் குழந்தையாகவே
அவன் எண்ணினான்;
அரசியிடம்
அனைத்தும் கூறினான்;
அவளும் அந்தக்
குழந்தையைக் கண்டு
குதூகலித்தாள்; தம்
குறை தீர்த்த ஈசுவரனைக்
கும்பிட்டு நன்றி தெரிவித்தாள்;


அடுத்து ஆள வாரிசு இல்லாததால்
அரசனின் எல்லாச் சொத்துக்களையும் தானே
அள்ளிக் கொள்ளலாம் என எண்ணிக் கிடந்த
அந்த அரண்மனையின் திவான் மட்டும்
அவதிக்குள்ளானான்;

                                                                        ( அருள் தொடரும் )

Wednesday, September 28, 2011

அருள் தரும் அய்யப்பன் - 4

                                    மோகினி

பாற்கடலை ஒருமுறை
இமையோரும்
இராக்கர் குலத்தோரும்
இணைந்து கடைகையில்
இணையில்லா அமுதம் வெளிப்பட,
இமையோருக்கு
எதுவும் கொடுக்காது
எல்லாவற்றையும்
அரக்கர் குலத்தோரே
அபகரித்துக்கொள்ள,
அதனால்
அபாயம் பல நேரும் என்று
அறிந்த திருமால்,
அந்த இக்கட்டிலிருந்து
அரக்கர்களை திசைதிருப்ப
மோகினி வேடமேடுத்து அழகான ஒரு
மாது வடிவில் அரக்கர்
முன் தோன்றி அவர்களை
மயக்கி அந்த அமுதத்தை
தேவர்க்கே வழங்கினார்
திருமால்.



அழகான மோகினியைக் கண்ட
அந்த பரமசிவன்
அக்கணமே அவளை மணந்து,
அழகான ஒரு
ஆண்மகவைப் பிறக்கச் செய்தார்.
அக் குழந்தைக்கு ஒரு மணிமாலை
அணிவித்தார்;
அரசன் இராசசேகர பாண்டியனிடம்
அக் குழந்தையை சேர்ப்பிக்க
ஆயத்தம் செய்தார்;

                                    மணிகண்டன்

மன்னன் இராஜசேகரன் தன்
மற்ற பரிவாரங்களோடு ஒரு
முறை பம்பா நதிக்கரையில்
வேட்டையாடி வரும்
வேளையில் குழந்தையின்
அழுகுரல் கேட்க
அருகே சென்று பார்த்தார்;
அடுத்தென்ன செய்வதென
அறியாது திகைக்கையில்
அங்கொரு முனிவர் தோன்றினார்;



                                                                        ( அருள் தொடரும் )

Tuesday, September 27, 2011

அருள் தரும் அய்யப்பன் - 3

                                    மகிஷி

மகிசாசுரனின் சகோதரி
மகிஷி; தன் அண்ணன்
மரணத்துக்குக் காரணமான
அனைவரையும்
அழித்திடுவேன் என்று
ஆவேசம் கொண்டாள்;
அதற்குத் தேவையான சக்தி
தர வேண்டி
தவத்தில் அமர்ந்தாள்,
தமையன்
பிரார்த்தித்த
பிரம்மனை வேண்டி;
பிரம்மன் வந்தான்;
பரமசிவனுக்கும்
பரந்தாமன் விஷ்ணுவுக்கும்
பிறந்த
பிள்ளையால்
மட்டுமே உனக்கு
மரணம் என்றுரைத்து
மறைந்தான் பிரம்மன்;
மகிழ்ந்து போனாள் மகிஷி;
மண் விண் எல்லா இடத்திலும்
மகிழ்ச்சியாய் வாழ்ந்திருந்தோரை எல்லாம்
துன்புறுத்தி வந்தாள்;




                                    இராஜசேகர பாண்டியன்

பண்டைய திருவிதாங்கூரில்
பந்தளநாடு ஒரு
பகுதியாகும்;
பந்தள நாட்டை
பாண்டிய மன்னன் இராஜசேகர
பாண்டியன் ஆண்டு வந்தான்.
பராக்கிரமம்
பல நிறைந்த மன்னனுக்கு தன்
பின் அரசாள ஒரு
பிள்ளை இல்லை என்ற
பெரும் கவலை இருந்தது; சிவ
பெருமானைத் துதித்துத் தமக்கு
பிள்ளை அருள அவன்
பாதம்
பணிந்தான் தன்
பத்தினியோடு;


வேளை தவறாது சிவனை
வேண்டினர்;
அரசன் அரசியின்
ஆழ்ந்த கவலையை
ஆண்டவன் போக்க எண்ணினான்;


                                                                        ( அருள் தொடரும் )

Monday, September 26, 2011

அருள் தரும் அய்யப்பன் - 2

                                    மகிசாசுரன்

அரம்பன் என்ற
அரக்கன்.
அவ்வரக்கனின்
அருமைப் புதல்வன்,
அவன் பெயர் மகிசாசுரன்.
அடவியில் கடுந்தவத்தில்
அந்த பிரம்மனை வேண்டி
அமர்ந்திருந்தான்;
அவன் தவத்தை எவ்விதத்திலும்
அசைக்க முடியாது, கடைசியில்
அவன் முன் தோன்றினார் பிரம்மன்;
'அய்யனே, இந்த
அவணியில் பிறந்த
ஆராலும் எனக்கு
அழிவு கூடாது’ எனக்கேட்க
அவ்வாறே வரம்
அளித்து மறைந்தார் பிரம்மன்.


வரத்தால் வந்த
வீரத்தில்
வையகத்தில்
வாழ்வோரையும்
வானகத்தில்
வாழும் தேவரையும்,
பல விதத்தில் துன்புறுத்தி,
பாவச் செயல்
பல புரிந்து வந்தான்,
இறக்கம் கொஞ்சம் கூட இல்லா
அரக்கன்.

                                    சண்டிகாதேவி

மூஉலகத்திலிருக்கும் தேவர்களனைவரும்
மும்மூர்த்திகளிடம் சென்று
முறையிட்டனர்
மூட அரக்கன்
தரும் துன்பத்திலிருந்து
தங்கள் எல்லோரையும் காக்க
தயை புரிய வேண்டினர்;


தனித் தனிய இருக்கும்
தங்களால் ஏதும் செய்ய முடியாதென்பதை உணர்ந்த
தேவர்களுக்கெல்லாம் தேவர்களான மும்மூர்த்திகளும்,
தம் சக்தி எல்லாம் ஒன்று திரட்டி
'சண்டிகாதேவி' என்ற
சக்தியைப் படைத்து மகிசாசுரனுடன்
சண்டையிடக் கேட்டுக்கொண்டனர்;
சண்டையில்
சாகடிக்கப்படான்
சண்டாளன் மகிசாசுரன்;


                                                                        ( அருள் தொடரும் )

Sunday, September 25, 2011

அருள் தரும் அய்யப்பன் - 1


                                    முன்னுரை

அழகாய்
அமர்ந்திருக்கும்
அய்யன்
அனுதினம் வருவான்;
அருள் நிறையத் தருவான்;
அவன் புகழ் பாடி
ஆனந்தம் அடைவோம் நாம்
அனைவரும்;



              அரிஹர புத்திரனை, ஆனந்த ரூபனை
              இருமூர்த்தி மைந்தனை, ஆறுமுகன் தம்பியை
              சபரி கிரீசனை, சாந்த ஸ்வரூபனை
              தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோமே;
              ஐயப்ப தேவன் கவசமிதனை
              அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
              தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
              நாடிய பொருளும் நலமும் வருமே !
                                                                    (நன்றி ayyappan-ldc.com)


                                                                        ( அருள் தொடரும் )

Saturday, September 24, 2011

கந்த புராணம் - 10


அசுரர்களைக் கொன்ற
அப் பாவம் தீர
ஆறுமுகன் திருச்செந்தூரில்
அப்பன் சிவனைத் துதித்தான்;


தேவன் இந்திரன் தன் பெண்
தெய்வானையை,
திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு
திருமணம் செய்துவித்தான்;

அதன் பின் முருகன்
வேடவப் பெண்
வள்ளியை மணம் செய்துகொண்டு
வள்ளி தெய்வானையோடு திருத்தணியில்
வாசிக்கலானான், தனை நாடி
வந்தோர்க்கெல்லாம் அருள்
வழங்கலானான் !




        முருகா உன்னைக் கண்டேன் - தந்தந்னா
        முத்துக் குமரா உன்னைக் கண்டேன் - தந்தந்னா
        கந்தா உன்னைக் கண்டேன் - தந்தந்னா
        கருணை வடிவாய்க் கண்டேன் - தந்தந்னா

        மயிலின் மேலே கண்டேன் - தந்தந்னா
        அந்த முகிலின் மேலும் கண்டேன் - தந்தந்னா
        கடலின் மேலே கண்டேன் - தந்தந்னா
        அந்த கரையின் மேலும் கண்டேன் - தந்தந்னா


அனைவருக்கும்
அருள் புரிவாய்
ஆறுமுகா !




Friday, September 23, 2011

கந்த புராணம் - 9

முருகன்
அரக்கன்
தேரைத்
தாக்கினான்; சூரபதுமன்
தூக்கி எறியப்பட்டான்;
ஆனால் அந்தத் தேரோ
ஆறுமுகனை வந்தடைந்தது;

பார்த்தான் சூரபதுமன்;
பறவை போல் உருமாற்றிக்கொண்டான்;
பாலசுப்ரமணியன் மேல்
பாய்ந்தான்;
மயில் மேல் ஏறினான்
முருகன்;
தன் வாளால் சூரபதுமன்
தாக்குதலைத்
தடுத்தான்;

மரமானான், மாயம் செய்தான்;
மறைந்து நின்றான்;


இருள், வெளிச்சம்
இருக்கையில் எங்கும் மறைய
இயலாது;
இவ்வாறு சொல்லி, அந்த மரத்தை
இரண்டாகப் பிளந்தான் முருகன்;

சூரபதுமன் தன்
சுய ரூபத்தில் மீண்டும்
தோன்றினான்;

முரட்டுக் காளையை மாறி, உன்னை
முட்டி மோதி வீழ்த்துவேன் என்றே
விரைந்து வர,
வெற்றிவேல் முருகன் தன்
வேலை அவன் மீது எய்த
சூரபதுமன் தோற்கடிக்கப்பட்டான்;

வடிவேலனின்
வீரர்கள்,
வான் வாழ் தேவர்கள்
வாழ்த்தினர்;


         ஆறுமுக தெய்வத்திற்கு அரகரோகரா !
         அழகான முருகனுக்கு அரகரோகரா !

         பரமசிவன் பாலனுக்கு அரகரோகரா !
         பன்னிருகை கொண்டவனுக்கு அரகரோகரா !

         சக்தி வடிவேலனுக்கு அரகரோகரா !
         சஞ்சலங்கள் தீர்ப்பவருக்கு அரகரோகரா !
                                                                                (நன்றி: ayyappan-ldc)


கண் மூடும் முன் தன்மேல்
கருணை காட்டக்
கேட்டுக் கொண்டான் சூரபதுமன்.

சூரபதுமா, நீ
மயிலாகவும் சேவலாகவும்
மாறி என்னோடு என்றும்
மறையாது இருப்பாய்
என்றே ஆசி வழங்கினான்
வேலவன்;

                                                                        ( தொடரும் )

Thursday, September 22, 2011

கந்த புராணம் - 8

அடுத்த நாள் போருக்கு
அதிரடியாய் நுழைந்தான்
அரக்கன் சிம்ஹமுகன்;
அழகன் முருகனின்
அனைத்து படை வீரர்களையும்
அலறியடித்து ஓடவைத்தான்;

மந்திரக் கயிறால் வீரபாகுவையும்
மற்ற வீரர்களையும் கட்டித்
தூக்கி எறிந்தான் போர்களத்தை விட்டு வெகு
தூரத்திற்கு;

சுப்பிரமணியன் இந்த
சூழ்ச்சியை உணர்ந்து தன்
சூலம் வில் அம்பு எல்லா
பானங்களையும் எரிந்து தன்
படை வீரர்களை மீட்டான்;

சிம்ஹமுகன்
சுப்பிரமணியனுடன் போரிடத்துணிந்தான்.
கடும் போர் செய்து
களைத்துப்போனான்;
கடைசியில் முருகன்
இந்திராயுதத்தை எய்தி
எதிரியை வீழ்த்தினான்;


தன் தவறை உணர்ந்து
திருந்தி மன்னித்தருள வேண்டினான்
சிம்ஹமுகன்;
அடைக்கலம்
அடைந்தவர்கெல்லாம்
அருள் செய்யும்
அந்த ஆறுமுகன்
அவ் அரக்கனையும்
ஆசீர்வதித்தான்;

                                    சூரபதுமனும் சுப்ரமணியனும்

போரிடத் தொடங்கினர் இருவரும்;
வேலனின் வீரத்தைப் பார்த்து
வியந்து போனான் சூரபதுமன்;
மாயம் பல செய்தான்;
இறந்தவர்களை மீண்டும்
இறவாதவர்களாக்கினான்;
தோரோடு
திடீரென்று
தலைமறைவானான்;
ஆறுமுகன்
அஸ்திரம் பல
அனுப்பி
அரக்கன்
அஸ்திரத்தை எல்லாம்
அபகரித்தான்;

                                                                        ( தொடரும் )

Wednesday, September 21, 2011

கந்த புராணம் - 7

                                    சிம்ஹமுகன்

சமாதானமாய்ச்
செல்வதே
சாதுர்யம்
என்று தான்
எண்ணுவதாய்
எடுத்துரைத்தான்
சூரபதுமனின்
தம்பி சிம்ஹமுகன்;

கோழையா நீ எனக்
கேள்வி கேட்டான் சூரபதுமன்;
உண்மை உணர்ந்து
நம்மைத் திருத்திக்கொள்வதைக்
கோழை என்றா சொல்வார்கள் என மறு
கேள்வி கேட்டான் சிம்ஹமுகன்;


எதிர்த்து பேசினால்
எரித்து விடுவேன்
என்று மிரட்டினான் அண்ணன்;

சொல்வதென் கடமை, சொல்லி விட்டேன்;
சோதரன் நீ முடிவெடு; உன்
சொல்லுக்கு என்றும் நான் துணையிருப்பேன்;
சொல்லி முடித்தான் சிம்ஹமுகன்;

அதற்குள் வீரபாகு
ஆறுமுகனை சந்தித்து
அரக்கன் போர்புரியும்
அவதியில் இருப்பதை
அறிவித்தான்;
அவ்வாறெனில்
அனைவரும் மகேந்திரபுரி நோக்கிச் செல்ல
ஆவன செய்வோம் என்றான்
ஆறுமுகன்.

                                    பான்கோபன்

மகேந்திரபுரியினுள் நுழையுமுன்னே
முருகனையும் அவன்
படையினரையும்
பான்கோபன், சூரபதுமனின்
பையன்
பாதை மறித்தான்;
தன்னோடு போரிட்டு வென்றால்
தொடர்ந்து செல்ல அனுமதிப்பதாய்ச்
சொன்னான்;

வீரபாகுவோடு போரிட்டான்;
வீழ்ந்தான் பான்கோபன்;
வெற்றி தந்த வீரபாகுவுக்கு
ஆசி தந்தான்
ஆறுமுகன்;

பாங்கோபனின் மரணம்
பாதித்தது சூரபதுமனை;
போருக்கு சிம்ஹமுகனை
போகப் பணிந்தான்;

                                                                        ( தொடரும் )

Tuesday, September 20, 2011

கந்த புராணம் - 6

                                    கிரௌஞ்சன், தராகன் அழிவு

கிரௌஞ்சன்
மலையாய் நின்று
முருகனை எதிர்கொண்டான்;
முருகனோ வேல் எடுத்தான்;
முக்கண்ணனை வணங்கி, வீசினான்;
மலையை இரண்டாய்ப் பிளந்தான்;
கிரௌஞ்சனை இல்லாது பண்ணினான்;

கிரௌஞ்சன் அழிந்ததைக்
கேள்விப்பட்ட தராகன்
குரோதம்
கொண்டான்;
குமாரனைக்
கொன்று திரும்புவேன் என்று
கிளம்பினான்;

தராகனைத்
துணிவுடன் எதிர்கொண்டான் முருகன்;
தவறுகளைத்
திருத்திக்கொள்ளவும்,
தேவர்களை விடுவிக்கவும்;

கோரிக்கை வைத்தான்
குமரன்;
கேட்க மறுத்தான்
அரக்கன்;

போர் செய்தான்;
தோற்றான்;
வேலுக்கு வெற்றி;
வாழ்த்தினர் வீரர்கள்;

தம்பியரின் மரணத்தில் அண்ணன்
தன் தவறை உணர்ந்து
திருந்தியிருப்பான், எனவே
தூதாக வீரபாகுவை அனுப்பினான், போரைத்
தடுக்க எண்ணினான்
திருமுருகன்;


சூடம் போல் காற்றில் கலந்து
சூரபதுமன் முன்னிலையில்
வெளிப்பட்டான்
வீரபாகு; போர்
விடுத்து தேவர்களை
விடுவிக்கக் கேட்டான்;
மறுத்தான் அரக்கன்;
மீண்டும் காற்றில்
மறைந்தான் தூதுவன்;

                                                                        ( தொடரும் )

Monday, September 19, 2011

கந்த புராணம் - 5

                                    அமிர்த வள்ளி, சுந்தர வள்ளி

விஷ்ணுவின் பெண்கள்
அமிர்த வள்ளியும் சுந்தர வள்ளியும்
சரவணனை மணமுடிக்க வேண்டி
சரவணப் பொய்கையில்
தவமிருந்தனர்.
சரவணன் அவர் முன் தோன்றி
இந்திரன் மகளாக
அமிர்த வள்ளி
அவதரிக்கையில்
அவளை மணந்து கொள்வதாகவும்,
சுந்தர வள்ளி
சிவ முனியின் மகளாகப்
பிறந்து
வேட்டையன் ஒருவனின்
வளர்ப்புப் பெண்ணாய்
வளர்ந்து
வரும் வேளையில் அவள்
வளைக்கரம் பிடிப்பதாயும்
வாக்குத் தந்தான்
வடிவேலன்.

                                    வேல்முருகன்

இதனைத் தொடர்ந்து சிவன்
இன்னும் சில வீரர்களை உருவாக்கி
இதோ வீரபாகுவும் மற்ற உன் வீரர்களும்;
இக்கணமே கிளம்பு;
இமையோர் துயர்
இல்லாது செய்திடு; என்றே
இயம்பினான் ஈஸ்வரன்;


தனயன்
தந்தையை
தலைவணங்கிக் கிளம்பினான்;
தந்தை
தனயனுக்கு ஒரு வேலாயுதம்
தந்தான்;
வேல் கொண்ட முருகன்
வேல்முருகன் என்றே
விளம்பப்பட்டான்;

வெற்றியோடு
வா
வேல்முருகா என்றே
வாழ்த்தி
வழியனுப்பினான்
விஸ்வேஸ்வரன்;


புயல் போல்
புறப்பட்டான் முருகன்
பாவக் காரியம்
பல செய்யும் சூர
பதுமனைப்
போரிட்டு வீழ்த்த;

வேல் முருகன் தலைமையில்
வேகமாய் முன்னேறிச் சென்றனர்
வீரபாகுவும் மற்ற
வீரர்களும், அசுரன்
சூரபதுமனை
வீழ்த்திட;

                                                                        ( தொடரும் )

Sunday, September 18, 2011

கந்த புராணம் - 4

                                    வரத்தால் வந்த வினை

மனிதம்
மிருகமானது;
தான் செல்லும் பாதை எங்கும்
தருமத்தைக் குலைத்தது;

தேவலோகம் சென்றனர்;
போர் செய்தனர்;
தேவர்களை வீழ்த்தினர்,
சிலரைச் சிறை வைத்தனர்;
பலரைத் தமக்குப்
பணி செய்யப்
பணிந்தனர்;
தேவர்களின்
தேவியரை
இட்ட பணி
கிட்ட பணி செய்துக்
கிடக்குமாறு
கட்டளை
இட்டனர்;



சூரபதுமன்
மகேந்திரபுரி என்ற மிக
அழகிய ஒரு நகரை
அமைத்து
ஆட்சிபுரிந்து வந்தான்.
அமரர் எல்லாம்
அந்நகரில் சேவகம் செய்துப்
பிழைத்து வந்தனர், தம்
நிலையை எண்ணி நொந்தனர்;

அரக்கனுக்கு வரம் தந்தான் சிவனே, நம்
அல்லல்களுக்கும் விடை தருவான் அவனே; என்று
கைலாயம் வந்தனர் தம்
கவலைகளுக்கு விடை தேடி;

கவலை எல்லாம் தீரும்; அவர்கள்
காலம் முடியும் நேரம் வரும்;
கலக்கம் வேண்டாம்; முக்
கண்ணன் மொழிந்தான்;

                                    ஆறுமுருகன் அவதாரம்

ஆறு முகம் கொண்டான் சிவன்;
ஆறு முகத்திலிருந்து
அனல் தரிவித்தான்;
அவ் அனலை வாயுவும்
அக்னியும்
அந்த சிவனின்
ஆணைப்படி கங்கையிடம் தர
அம்மங்கை அதனை இமையமலையிலிருக்கும்
சரவணப் பொய்கையில்
அர்ப்பணிக்க, அந்த
ஆறு நெருப்புப் பிளம்பிலிருந்து
அழகாய்
ஆறு குழந்தைகள்
அவதரிக்க, தேவ கன்னியர்
அருவர்
அவ்வழியே செல்கையில் கண்டு
ஆளுக்கு ஒரு குழந்தையை
அள்ளி எடுத்துக்கொண்டனர்;

கிருத்திகை எனப்படும் அக்
கன்னியர் ஆறு
குழந்தைகளையும்
கொஞ்சி
விளையாடி
வளர்த்து
வந்தனர்;


பார்வதி
பரமசிவனோடு தன்
பிள்ளைகளைப்
பார்க்க வந்தாள்;
ஆறு குழந்தைகளையும் ஒரு உருவம்,
ஆறு முகம், இரு
ஆறு கைகள் கொண்டவாறு
ஆக்கினாள்;
ஆறு முருகனை
ஆறுமுகன் என்று
அழைக்குமாறு
அறிவுறுத்தினாள்;

                                                                        ( தொடரும் )

Saturday, September 17, 2011

கந்த புராணம் - 3

                                    சூரபதுமன்

மாயை வென்றது; திரு
மணம் முடிந்தது;
மாயை புரிந்தவளுக்கு ஆண்
மகவு பிறந்தது;
மகனுக்கு
சூரபதுமன் எனப் பெயர்
சூட்டினாள்;


நாட்கள்
நகர்ந்தது;
மேலும் இரு
மகவு பிறந்தது
மாயாவுக்கு;
கிரௌஞ்சன், தராகன்
எனப் பெயரிட்டாள்; தேவர்களைப்
பழிவாங்கும் தன்
எண்ணத்தைப்
புதல்வர்களுக்குப்
புகட்டி வந்தாள்;

காசியப்பர்
தாயைப் பாதுகாக்கும்படி
தனயன்களுக்கு அறிவுறுத்தி
தன்
கடமையாற்ற
தனி வழி செல்ல,
தகுந்த நேரம் வந்ததென
தாய் எண்ணி,
சிவனை வழிபாடு,
சக்தி கேள்,
பலம் பொருந்தியவனாய் மாறு
கட்டளையிட்டாள் தாய்;
கடமையாற்றக்
கிளம்பினர்
தாய் சொல்லை மீறாத்
தனயர்;

                                    சிவம் தந்த வரம்

சிவனை எண்ணித்
தவம் இயற்றினார்;
வந்தது சிவம்;
தந்தது வரம்;
மூவுலகையும் ஆளவேண்டும், இறவா
வரம் வேண்டும்;
அண்ணன் கேட்டான்
ஆம் என்றனர் தம்பியர்;

இறவாது இருக்க
எவராலும் முடியாது;
என் சக்தி தவிர வேறு
எந்த சக்தியாலும் உன்னை
அழிக்க முடியாது,
மூவுலகுக்கும் நீயே
முதல்வன்;
வரம் தந்து
மறைந்தான்
மகாதேவன்;
வாங்கி வந்த
வரம் கேட்டு
மகிழ்ந்தாள்
மாயா;

                                                                        ( தொடரும் )

Friday, September 16, 2011

கந்த புராணம் - 2

                                    மாயா

அந்த காலம்;
அமரர்கள் வலுவோடு வாழ்ந்த காலம்;
அரக்கர்கள்
போரிலெல்லாம்
புறமுதுகு காட்டி
பயந்துப் பதுங்கி வாழ்ந்த காலம்;

அந்த மாதிரி ஒரு போரில்
அரக்கர்கள் மீண்டும் தோற்க
அவர்கள் தலைவன்
ஆகிர்சன் கவலையோடு கவிழ்ந்திருக்க
அவர் பெண் மாயா
ஆறுதல்படுத்தினாள்
அப்பனை,
இமை மூடாதார்களை
இல்லை என்று ஆக்குவேன், அதுவரை நான்
இமை மூடாது
இருப்பேன்,
இவ்வாறு செய்ய முடியாது போனால்
இமை இரண்டும் என்று திறவாது
இறந்து போவேன்; என்றே
இயம்பினாள்;

                                    மாயாவின் மாயை

மாயா தன்னை ஒரு அழகான
மங்கையாக
மாற்றிக்கொண்டாள்;
காசியப்ப முனி
கடுந்தவம் இயற்றும்
காட்டுக்கு வந்தாள்;

தவசி இவரைத்
தான்
திருமணம் செய்து கொண்டு
திறமை பல படைத்த
தனயன் பல பெற்றுத்
தேவர்களைத்
தோற்கடிக்கலாம் என்றே
திட்டமிட்டாள்;



அடர்ந்த
அடவியை
அழகான நந்தவனம்
ஆக்கினாள்;
ஆடினாள் நடனம்;
பாடினால் பாட்டு;
கண் திறந்து
காசியப்பர்;
கண்டார்
மாயாவின்
மாயையான அழகை;
மங்கை
மாற்றிய சுற்றுப்புற சூழலை;
மனம் மகிழ்ந்தார்;
'மங்கை வேண்டுவதென்ன'
முனிவர் வினவினார்;
'மணமுடிக்க வேண்டும்
மாகா முனி தங்களை'
மாயா உரைத்தாள்;

                                                                        ( தொடரும் )

Thursday, September 15, 2011

கந்த புராணம் - 1





                                    முன்னுரை - என்னுரை

கந்த புராணம்
கவிதைத் தமிழில்
சொல்கிறேன்.
தவறிருந்தால்
தெரிவிக்கவும்,
திருத்திக்கொள்கிறேன்;

காஞ்சிபுரத்தில்
குமரன் கோட்டத்தில்
வாழ்ந்து வந்த
கச்சியப்ப சிவச்சர்யாரால்
பாடப்பட்டது இந்த
கந்த புராணம்;

ஸ்கந்த புராணா என்ற
சமஸ்கிருத நூலின்
தமிழாக்கமே இந்தக்
கந்த புராணம்;

காலையில் பாடல் எழுத, மாலையில்
குமரன் கோட்டத்துக்
கோவில் சந்நிதியில் சமர்ப்பிக்க, இரவில்
கந்தன் பாடல் பிழை திருத்தம் செய்ய
அப்படிப் பாடப்பட்டதாம் இந்தக்
கந்த புராணம்;

கந்த புராணம் படித்துக்
கந்தனின் அருளைப் பெற்று
வளமாய்
வாழ்வோம் நாமெல்லோரும்;

                                                                        ( தொடரும் )

Wednesday, September 14, 2011

பேசத் துடிக்குது பித்து நெஞ்சம்

பேசத் துடிக்குது
பித்து நெஞ்சம்.

எனக்கு உன் மேல் கோபமுண்டு;
உனக்கும் என் மேல் கோபமுண்டு;
இருந்தும்
பேசத் துடிக்கிறது
பித்து நெஞ்சம்.

எதையோச் சொல்லத் துடிக்குது மனசு.
எப்படிச் சொல்வதெனத் தெரியாது தவிக்குது;
சொல்லவும் தெரியாது
சொல்லாதிருக்கவும் முடியாது;
பசியும் பொறுக்க முடியாது,
உண்ணவும் பிடிக்காது
....
பேசத் துடிக்கிறது
பித்து நெஞ்சம்.

ஏனோ எனைப் புரிந்துகொள்ள
மறுக்கிறாய்,
என் காதலை,
என் எண்ணங்களை,
என் ஆசையை,
ஏன் உன்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை ?

இருதயத்தை
இரண்டாக உடைத்தாய்;
என் சொல்லைக் கேட்க மறுத்தாய்;
என்னையும் துறந்து
எங்கோ மறைந்துவிட்டாய்;

நீ
அருகிலிருக்கையில்
அறியாத
உணர்வுகள்
விலகி நிற்கையில்
உணர்ந்தது
உண்மையே;

பேசத் துடிக்குது
பித்து நெஞ்சம்.

நீ
விலகி நின்றது
வலிக்கவில்லையென
உதடுகள் சொன்னாலும்
உள்ளம் மறுக்குது;

எல்லைகள் கடந்திட
எண்ணுது நெஞ்சம்;
ஒருமுறைப் பார்த்திடப்
பலமுறை துடிக்குது விழிகள்;

நீ பேசக் கேட்டிருக்கிறேன்;
உன்னைத் தொட்டு உணர்ந்திருக்கிறேன்;
நீ சிரிக்க சிரித்திருக்கிறேன்;
நீ இல்லாது தனிமையில் அழுகிறேன் இப்போது;
இதுவும் ஒரு அனுபவமே;

கடைசிக் காலம் வரை - என்
கண்ணிலிருந்து மறையாதிரு;
உலகிற்கு நீ யாராயிருந்தாலும்
எனக்கு நீயே உலகம்;

தனியே என்னைத்
தவிக்க விட்டு
சென்றது எங்கு
சொல்லடி ?

சொல்லாமல்
சென்ற உன்
செயல் மட்டும்
கொள்ளாமல்
கொல்கிறது என்னை
அனுதினமும்.

காலம் காயம் ஆற்றும் வரை
காதல் இன்னும் கனியும் வரை,
இரவு பகல்,
மழை வெயில்,
எப்பொழுதும்,
எல்லாவிடத்திலும்,
என்றும்,

காத்திருக்கிறேன்
காத்திருப்பேன்
காதலியே உனக்காக;

Tuesday, September 13, 2011

ஆடை அபகரணம் - 9

"குளிர்ந்த நீரில்
இத்தனை நேரம்,
வெளி வர முடியாது
வேதனைப்படுகிறோம்;
சந்தோசமாய் மரத்தில்
சாய்ந்து அமர்ந்து எங்கள்
சங்கடங்களை ரசித்துவருகிறாய்;
சத்தம்போட்டு ஊர்
சனங்களை அழைக்கலாமென்றால் எங்கள்
சத்தம் அவர்தம்
செவிக்கெட்டா தூரத்தில் நாமிருக்கிறோம்;
எங்களோடு நீ மட்டும்,
எந்த உதவியும் செய்யாது
ஏராளமான உபத்திரவம் செய்துகொண்டு;
என்றும் உன்னோடு இணைந்திருக்கவே
எங்கள் விருப்பம்,
எம் தாயின் சம்மதத்திற்காக
எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்;
எல்லோரையும் என்றும் காத்தருளும்
எசொதைக் கண்ணா,
எமது ஆடை தந்து
எமக்கருள வேண்டுகிறோம்";

கன்னியர் மேல்
கரிசனம் காட்ட எண்ணினான்,
கன்னியர்க்கு அருள் புரியக்
காலம் இதுவே என்றுக்
கருதினான் கண்ணன்;

"கண் மூடிக் கொள்வேன்,
கன்னியர் ஒவ்வொருவராய்க்
கை தலை போல் தூக்கி
கண்மூடிப் பிரார்த்தித்து
கரை ஏறுங்கள்,
ஆடை அணிகலன்
அணிந்துகொள்ளுங்கள்,
அடியேனை
அடையும் பாக்கியம் பெறுவீர்கள்" என்றே
ஆசிர்வதித்து
அங்கிருந்து மறைந்தான்
ஆயர்பாடிக் கண்ணன்.

                                                                        ( லீலை முடிவுற்றது )

Monday, September 12, 2011

ஆடை அபகரணம் - 8

"கண்ணா,
குளத்திலிருக்கும் தாமரை எங்கள்
கால்களைக்
கட்டிப்படர்கிறது; அது
விடம் நிறைந்த
தேள் எங்களைச்
சுற்றுவது போல்
தோன்றுகிறது"
என்றே கூவினர்
கன்னியர்.

"குளம் விட்டு
மேலேற வேண்டியதுதானே"
என்றான் கண்ணன்.

"தண்ணீரிலிருக்கும்
தாமரை மலரிலிருந்து
தப்பிக்க எண்ணி
தரை ஏறினால்
தாமரை போன்றுன் கண்ணிலிருந்து
தப்பிக்க முடியாது
தாமோதரா"

"நீங்கள் வந்ததிலிருந்து
நானும் இந்த மரத்தில்
வந்தமர்ந்திருக்கிறேன்;
வண்டுகள் பூச்சி புழு இந்த
வன மரத்தில் ஏராளம்; அவையெல்லாமென்
உடலைக் கடிக்கிறதே; அவ்
வலியை எங்கே போய் நான் சொல்ல"

"எங்கள்
ஆடைகளை எடுத்துக்கொண்டு
அங்கு போய் அமர்ந்ததினாலே
அவ்வாறு கடி பட நேருகிறது கண்ணா,
அது உன் தவறே, எங்கள்
ஆடைகளை எங்கட்கு
அளித்து மரம் விட்டு இறங்கிவிடேன்"

"சரி சரி, என் வேதனையை நான்
சகித்துக்கொள்கிறேன்; ஆனால் உங்கள்
சங்கடங்களை என்னால்
சரி செய்ய இயலாது"

கண்ணனே தொடர்ந்தான்
"வேண்டுமென்றால் என் ஆடைகளை
எடுத்துத் தருகிறேன்,
எல்லாரும் ஏற்றுக்கொள்வீரா ?"
என்றே வினவினான்.

"உன் ஆடை
உடுத்திக் கொண்டு சென்றால்
கண்ணனின் ஆடை
கன்னி உன் இடையில் வந்தது
எங்கனம் என்று
ஏழாயிரம் கேள்விக்கணை
எடுப்பாள்
என் அன்னை"
என்றுரைத்தனர் எல்லாரும்.
தம் துணியையே
தமக்குத்
தரக் சொல்லி வேண்டினர்;

                                                                        ( லீலை தொடரும் )

Sunday, September 11, 2011

ஆடை அபகரணம் - 7

"கார் மேகக்
கண்ணா
எங்கள் ஆடைகள்
எல்லாவற்றையும் நீ
எடுத்துக் கொண்டதால்
எங்களால்
குளம் விட்டு வெளியேற முடியாது
குளிர்ந்த நீரில்
விடி காலையிலிருந்து
விரைத்துப்போய்க் கிடக்கிறோம்;
குளத்திலிருக்கும் சிறு பெரு
மீன்கள் எங்கள்
கால்களைக்
கடிப்பதால் நிற்பது
கடினமாய் இருக்கிறது;
கண்ணா, எங்கள் ஆடைகளை
எங்கட்கு அளித்து
கடிக்கும் இந்த
மீன்களிடமிருந்து எங்களை
மீட்பாயாக".

இன்னும் தொடர்ந்தனர்.
"அன்றொருநாள்
முதலையின் வாயில்
மாட்டிக்கொண்ட வாரணத்தின் காலை
மீட்க உதவிக்கு வந்தவனன்றோ நீ,
வாரணத்தைக் காத்தவன் இந்த
வஞ்சியரைக் காக்கமாட்டாயா ?
மீனின் கடியில்
மாட்டித் துன்புருகிறோமே;
மாதவா எங்களை இத்துயரத்திலிருந்து
மீட்கமாட்டாயா ?

"அது வேறு, இது வேறு,
அத் துன்பத்திற்கு
ஆரோ காரணம்,
ஆனால் உங்களின் இத் துன்பத்திற்கு
ஆரும் அல்ல, நீங்களே காரணம்"
என்றான் கண்ணன்.

"அண்ணன்கள் இந்த உன் செயல்
அறிந்தாரேயானால்
அவர்கள் உன்னை
அதட்ட தண்டிக்க நேரிடும்; உன் இந்த
குழந்தைத்தனமான
குறும்பினால் எத்தனைக்
குழப்பங்கள், எத்தனைப்
பேருக்கு துன்பங்கள்
நேர்கிறது அறியாயோ நீ ?
எங்கள் ஆடைகளை
எங்கட்கு அளித்துக்
காத்தருள வேண்டுகிறோம்".

"அண்ணன்கள்
அணி திரண்டு எனை
அடிக்க வருவார்களோ ?
வரட்டும், ஒரு கை பார்க்கிறேன்"
என்றே பதிலுரைத்து
கிளையிலிருக்கும்
ஆடைகளில் ஒன்றை
அணிந்துகொண்டான்;
"அழகாயிருக்கிறேனா நானிந்த
ஆடையில் ?
அம்சமாய்ப் பொருந்துகிறதே,
அப்படியே தரச் சொல்லி
அடம்பிடிக்கிறீர்களே
அநியாயமன்றோ இது"
என்றான்.

"அடடா,
அழகாய்ப் பொருந்துகிறதே உனக்கு,
அந்த ஆடை வேண்டுமென்றால் நீயே
வைத்துக்கொள்,
கிளையிலிருக்கும் மற்ற ஆடைகளைக்
கீழே போடேன்"
என்றே கெஞ்சினர் கோபியர்.


                                                                        ( லீலை தொடரும் )

Saturday, September 10, 2011

ஆடை அபகரணம் - 6

அவ்வமயம்
ஆண்டாள்
மெல்லப் பேசினாள்,
"கண்ணா நீ அந்த
கோதண்ட ராமனல்லவோ,
இல்லத்தரசியை மீட்க
இலங்கையை
வில் கொண்டு
வீழ்த்தியவனல்லவோ நீ,
பெண்ணைக் காக்க
போரிட்டவன் சிறு
பிள்ளைகளான எங்களைக்
குளத்தின் கரையில்
குழந்தைத்தனமாய்
அம்மனமாய் நிறுத்தி
அழ வைத்து
அவமானப்படுத்தலாமா ?
ஆடை தந்துவிடு
அனந்த கிருஷ்ணா,
அமுத வாய் திறந்து,
முகுந்தா, நீ
மொழிவது எல்லாம்
முனைந்து செய்வோம்
நாங்கள் எல்லாம்,
பிறர் பார்க்குமுன்
போய்விட விழைகிறோம்,
பரந்தாமா ஆடை தா" என்றே
பேசினாள்.

பேதையரை
பயமுறுத்த எண்ணினான்
பரந்தாமன்.
நாலு பக்கமும்
திருதிருவென
திரும்பிப் பார்த்து
"யாரோ வருகிறார்கள்" என்றுரைத்து
மரத்தின் இலைகளிடையில் தன்னை
மறைத்துக்கொள்ள
முற்பட்டான்.
தன் உடலையும்
சுருக்கிக் கொள்வதாய்
நடித்தான்.
ஏற்கனவே
அழுதுகொண்டிருக்கும்
அனைவரும் மேலும்
அச்சமுற்றனர்;

குரங்கு போல்
கிளைக்கு கிளை
தாவிக் கண்ணன் அவர்களுக்கு
ஆட்டம் காண்பித்தான்.

ஆண்டாள் மீண்டும்
ஆயர்பாடிக் கண்ணனிடம்
அன்பு மாறாதுப் பேசினாள்
"இலங்கையை அழித்த
இராமா,
குளம் நோக்கி
குளிக்க பலர்
கூடும் நேரமிது;
எங்களை இக்கோலத்தில்
கண்டால்
ஏளனமாய்
எண்ணுவர். அதையும் தவிர
எங்கள்
தாய்வசம் சொல்லுவர்.
தயை காட்டாயோ
தாமோதரா ?
கண்ணிலிருந்து நீர்
குறையாது
கொட்டிக்
கெஞ்சுகிறோம்;
மரம் விட்டு
மரம் தாவும்
மந்திகளுக்கெல்லாம்
மன்னா,
போதும் உன் விளையாட்டு,
எமது ஆடைகளை
எம்மிடம் தந்துவிடு;"

                                                                        ( லீலை தொடரும் )

Friday, September 9, 2011

ஆடை அபகரணம் - 5

"சிறுவனைப் போல் எங்களைச்
சீண்டி விளையாடுகிறாயே,
சிரீதரா ! இது உனக்குத் தகுமா ?"

"நான் சிறுவனா ?
துணியில்லாது
துவம்சம் செய்து குளித்து
வருண பகவானை
வருந்தச்செய்த
நீங்கள் சிறுமிகளா ?
இதையும் தவிர என்னைத்
தொட்டுப் பரவசம் அடைய
தயங்குகிறீர்களே."

"கண்ணா,
எங்கள் பெற்றோர்
இதற்கு ஒப்ப மாட்டர்,
இதுவே எங்கள் தயக்கத்துக்குக்
காரணம்".

இவ்வாறு
உரைத்ததும்
"எனக்குப் பெற்றோர் இல்லையா,
வானத்திலிருந்தா நான்
குதித்தேன்,
உங்களைத் தொட்டணைக்க
எனக்கு ஆசை இருக்கு,
என்னைத் தொட்டணைக்க
ஏன் உங்கட்கு ஆசை இல்லை"
என்றே வினவினான்
எசொதை மைந்தன்.

"கண்ணா,
பிறர்
பழித்துப்
பேச கண்டுகொள்ளாது
போய்விடுகிறாய் நீ.
நாங்களோ
மானம் வெட்கம்
மதித்துப்
பிழைக்கிறோம்".

"மானமற்றவனா நான் ?
மரியாதையாய்
மன்னிப்பு கோராவிட்டால்
மறுகணமே ஆடைகளோடு
மாயமாய்
மறைந்து விடுவேன் நான்"
பயமுறுத்தினான்
பலராமனுக்குப்
பின்னவன்.

                                                                        ( லீலை தொடரும் )

Thursday, September 8, 2011

ஆடை அபகரணம் - 4

கேள்வி கேட்டு
கேசவனை வீழ்த்த
முடியாதென்று அறிந்த ஆண்டாள்
பாசத்தால்
பரந்தாமனைப்
பணிய வைக்க எண்ணினாள்;

“ஆயர்பாடியின்
அணிகலனே,
அனைவராலும்
ஆராதிக்கப்படுபவனே,
அழகிய மாலை பல
அணிந்தவனே,
உன்போல் புகழ் பெற்றோர்
யாரும் இல்லை இங்கு;
சிறியப் பிள்ளைகள் நாங்கள்;
எங்கள் பிழை பொறுத்தருள்வாய்;
எங்கள் ஆடைகள்
எமக்களித்தால்
விரைந்து நாங்கள்
விரதம் செய்து எங்கள்
வழி செல்வோம்,
காப்பாற்று
கேசவா”
கோதை கெஞ்சினாள்.

"என்னைப் பற்றி
எல்லாம் அறிந்திருக்கிறாய், இருந்தும்
ஏன் என்னைத் தொட அஞ்சுகிறாய் ?"

"உலகளந்த உத்தமா,
உன்னோடு இணைய
நேரம் இன்னும்
வரவில்லை".

"சரி, அந்நேரம்
வரும்வரை நான் ஆடையைத்
தரப்போவதில்லை" என்றே
மீண்டும்
மரத்தின்
மீது ஏறினான்
மாதவன்.

"கையிலிருக்கும் ஆடைகளைக்
கொடுத்துவிடு கண்ணா".

ஆடைகளை மரக்
கிளையில் வைத்துவிட்டு
என்னிடம்
எங்கிருக்கு உங்கள் ஆடை
என்றே வினவினான்
ஏதுமறியாதவன் போல்
எசோதை மைந்தன்.

"கிளையிலிருக்கும்
எங்கள் ஆடைகளை
எல்லாம் எடுத்துத் தா"
என்றே கெஞ்சினர்
எல்லோரும்;

                                                                        ( லீலை தொடரும் )

Wednesday, September 7, 2011

ஆடை அபகரணம் - 3

ஆண்டாள் கெஞ்சினாள்;
கண்ணா,
கார்மேக வண்ணா,
நானும் என் தோழியரும்
விடிகாலை வேளை நீராடி எம்
விரதம் தொடங்க
விரைந்து வந்தோம்;
விடிந்தது பொழுது;
குளித்து முடித்தோம் நாங்கள்;
ஆடைகளை அபகரித்தாய் நீ;
துக்கித்து நிற்கிறோம் நாங்கள்;
குதூகலித்துக் கிடக்கிறாய் நீ;
குளிரிலே நடுங்குகிறோம் நாங்கள்;
கொடுத்திடு ஆடையை நீ;
இனி யாரும் வரமாட்டோம்
இக் குளத்திற்கு;
எல்லோரும் கெஞ்சிக் கேட்கிறோம்;
காத்து அருள பணிகிறோம்
பரந்தாமா;

ஒ கோபாலா
காளியன்
தலை மேல் நர்த்தனமாடி அவன்
தலைக் கனத்தை
தவிடுபொடியாக்கினாய்;
எங்கள் மேல்
என்ன கோபம் உனக்கு ?
ஏன் வந்தாய் யாரும்
எழாத பொழுது இங்கு ?
எங்களை வதைப்பது
ஏனோ ?
எங்கனம் நீ
இங்கு நாங்கள்
இருப்பதை
அறிந்தாய் ?
என்றே கேட்க,

கண்ணன் சொன்னான்.
எல்லாம் நானே
என்றறிந்த பின்னும்
ஏனிந்த விரதமெல்லாம் ?
எனக்குத் தெரியாமல்
ஏன் இங்கு வர நினைத்தீர் ?
என்று எதிர்கேள்வி கேட்டான்.

                                                                        ( லீலை தொடரும் )

Tuesday, September 6, 2011

ஆடை அபகரணம் - 2

கண்ணன்
காத்திருந்தான், அவர்கள்
வருமுன்னே
வந்தமர்ந்திருந்தான்,
ஆற்றின் மரக்கிளையில்;

இது ஏதுமறியாது
வந்தனர் கோதையர்;
அவிழ்த்தனர் தம் ஆடையை;
அம்மணம் ஆயினர்;
ஆற்றில் நீராடி மகிழ்ந்தனர்;

கண்ணனோ கிளையில்;
கவர்ந்திழுத்தான்
கீழே கிடக்கும்
கன்னியரின் ஆடையெல்லாம்;
எடுத்தான் தன் குழலை;
ஊதினான், தான்
அமர்ந்திருப்பதை
அறிவித்தான்;

ஆடையில்லாது நீராடியோர்
ஐயோ ஐயோ என்று அலறினர்;
ஆபத்தா ? துணை வரவா என்றே
கண்ணன் வினவினான்;
கிளையிலிருந்து கீழே
குதித்தான்;

கண்ணா நில் என்றே
கத்தினர், கதறினார்;
ஆடை இல்லாது
ஆற்றில் குளித்தது,
தவறென்றான் கண்ணன்.
தயை புரிய வேண்டினர்
பெண்கள்;

                                                                        ( லீலை தொடரும் )

Monday, September 5, 2011

ஆடை அபகரணம் - 1

ஆண்டாளும்
அவள் தோழியரும்
விடியும் முன் நீராடி
வரலாமென்று
ஒவ்வொருவராய்
ஓசையேதும்
ஒலிக்காது
புறப்பட்டு வந்தடைந்தனர்
பொதிகைக்கு.

சேர்ந்து கதை பேசி
சிரித்துக்கொண்டே வந்தால்
சிரீதரனுக்கு
செய்தி சென்றுவிடுமென்பதால்
தனித்தனியே வந்தனர்.

தாம் வந்த
பாதையெங்கும்
பதிந்த தம்
பாதத் தடயத்தையும்
அழித்துக்கொண்டே
வந்தனர்.

தாம் சென்ற வழி
தடயம்
தாமோதரனுக்கு
தெரிந்து விட்டால்
தமை நாடி வந்துவிடுவான்; அவன்
தம்மைத்
தொடரக்கூடாதென
உறுதியோடு இருந்தனர்
ஆண்டாளும், அவள் தோழியரும்;

இரவெல்லாம்
கோபியரோடு
கலந்தாடி
கலைத்திருப்பான்
கண்ணன், விடி
காலையிலே
கண் மூடி உறங்கியிருப்பான் எனத் தப்புக்
கணக்கு போட்டனர்.

                                                                        ( லீலை தொடரும் )

Sunday, September 4, 2011

ஆண்டாள் திருப்பாவை - 11

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
   செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றிலாத கோவலர்த்தம் பொற்கொடியே
   புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
   முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
   எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்


பல கறவை ஒருசேரக் கரந்தும்,
போரிட்டு எதிரி
பலரை வெல்லும்
பலம் பொருந்தியோரும்,
புகழ் என்றும் குறையா நம் குலத்தில்
பிரசித்தி பெற்றவளே,
பொற்கொல்லனின்
பெண்ணே, மயில்
போன்றவளே,
புற்றினுள் புகும்
பாம்பைப் போல் இடை சிருத்தவளே,
உன் வீட்டு முற்றத்தில்
உனக்காகக்
காத்திருக்கிறோம்;
கருநிறக் கண்ணன் புகழ் பாடாது
கண் வாய் திறவாது இன்னும் உறங்கிக்
கிடக்கிறாயே, எழுந்து வாராயோ ?

Friday, September 2, 2011

ஆண்டாள் திருப்பாவை - 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
   மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
   போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
   தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
   தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்


விரதமிருந்து நான் சுவர்க்கம்
புகுவேன் எனச் சொல்லும்
பெண்ணே,
கதவும் திறவாது, எங்கள்
கத்தலும்
காதில் போட்டுக் கொள்ளாது
கண் மூடிக் கிடக்கிறாயே,
நாராயண் புகழ் பாடி
நோன்பிருந்தால் நாம் கேட்கும்
நலமெல்லாம் நமக்களிப்பான்.
கும்பகர்ணன்,
தான் தோற்று இறந்த பிறகு
தன் தூக்கமெல்லாம்
உனக்களித்தானோ ?
ஆழ்ந்த உறக்கத்தில்
இருப்பவளே,
இக்கணமே
எழுந்து
எங்களோடு வாராய் !!!

Thursday, September 1, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.5

வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
   விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்க ளிழைத்தகோல
   மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
   உரோடமொன்று மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா ! கேசவா! உன்
   முகத்தனகண்க ளல்லவே



வெள்ளை நுண் மணல் கொண்டே
வரைந்த எங்கள் கோலங்களை ஓடி
வந்தே நீ அழித்திட்டாலும், அதனால்
வருந்தி நாங்கள் அழுதிட்டாலும்
உன் திருமுகம் பார்க்கும்போதெல்லாம்
உள்ளம் உருகுதே, எப்படி
உன் மேல் கோபம் கொள்வோம்;
காதல் மட்டும் பொங்கி வழிகிறதே
கேசவா, மாதவா;
காண்போரை எல்லாம்
கவரும் கண்களைக்
கொண்டவனே, உன் மேல்
கோபம் கொள்வது இயலாதே;