Friday, July 29, 2011

ஜெயதேவா - கீதா கோவிந்தம் - 10 part 3

தந்திரக்காரக் கண்ணன் - part 3

குயிலின்
குரலாய்க்
கொஞ்சிப் பேசும் ராதே,
தரையில் மலர்ந்த
தாமரை போன்றுன்
பாதங்களே எனைப்
பரவசப்படுத்தும்
பலவற்றுள் முதன்மையானது;
அழகான
அந்தப் பாதங்களை இன்னும்
அழகாக்க மருதாணி
அப்பிவிடட்டா;
ஆனந்தத்தில்
ஆழ்த்தும் உன்னை;
சம்மதி, செய்கிறேன்;

குயிலின்
குரலாய்க்
கொஞ்சிப் பேசும் ராதே,
தரையில் மலர்ந்த
தாமரை போன்றுன்
பாதங்களே எனைப்
பரவசப்படுத்தும்
பலவற்றுள் முதன்மையானது;
அழகான
அந்தப் பாதங்களை இன்னும்
அழகாக்க மருதாணி
அப்பிவிடட்டா;
ஆனந்தத்தில்
ஆழ்த்தும் உன்னை;
சம்மதி, செய்கிறேன்;

என் காதலே,
மென்மையான உன்
பாதத்தை என்
தலையில் வைத்தெனை
தன்னியனாக்கு;
காமதேவனின்
கனல்கலெனைக்
காய்ச்சி எடுக்கிறது;
காமக்
கடலில் என்னுடலைக்
கரையேற்ற துணைவா;
காமனின்
சோதனைகளைச்
சமாளிக்க என்னுடன்வா;

Thursday, July 28, 2011

ஜெயதேவா - கீதா கோவிந்தம் - 10 part 2

தந்திரக்காரக் கண்ணன் - part 2

என் அழகே நீதான்;
உண்மையானவள்,
உத்தமமானவள் நீ;
எனக்கணிகலன் நீ தான்;
என் எல்லாமே நீ;
உனை விட்டு
விலக முடியாது என்னால்;
உறுதியோடு
உரைக்கிறேன்
இனிமையானவள்
இந்த ராதே,
என் இதயம் ஏங்குது,
என்னிடம் வாராது இராதே;

ராதே,
காந்தம் போலக்
கவர்ந்திழுக்குமுன்
கண்கள்
கோபத்தால் நிறம்மாறி
கோவைப் பழமாகியிருப்பதைக்
காண்கிறேன்;
சிவந்திருந்தும் எனைக் காதல்
சிறையில் அடைத்து கருத்த மேனி
சிவந்துபோகச்
செய்யுமெனில்
உன் இந்த எல்லாக் கோபத்தையும்
வரவேற்கிறேன்;

அன்பே,
சிவந்த உன் கண்கள்
கருத்த உன் முலைகளின்
அழகை
அதிகப்படுத்தும்;
அங்ஙனம்
கருத்த முலைகள் என்
கருத்த மார்பில் மோதி நம்
காதலை
காமத்தில்
ஆழ்த்தும்;
அச்சமயம்
அழகாய் வளைந்திருக்குமுன் இடையில்
அணிந்த மணிகள்
அசைந்தசைந்து ஓசை எழுப்பி
அறிவிக்கும்,
காதல் நம்முள் மீண்டும்
கனிந்ததை;

ஜெயதேவா - கீதா கோவிந்தம் - 10 part 1

தந்திரக்காரக் கண்ணன் - part 1

அந்தி வேளையில்,
அழகான முகத்துடன்
அமர்ந்திருக்கும் ராதையிடம்
ஆவலோடு வந்தான்
ஆயர்ப்பாடிக் கண்ணன்.
'என்ன செய்ய நான் இப்போ'
எனக் கண்ணாலே கேட்டாள்,
கோபம் கொஞ்சம் கூடக்
குறையாத
கோதை ராதை, தோழியிடம்;
ராதையின் வேதனை
கலந்த கோபத்தைக்
கண்ட கண்ணன் தன்
ஆவலை அடக்கிக்கொண்டு
அமைதியாய்
இதமாய்ப்
பேசத் தொடங்கினான்;

அன்பே,
தாமரை போன்றுன்
திருமுகத்தைத்
தரிசிக்க எனக்கருள்வாயா ?
செவ்வாய் திறந்து
சொல்லேன் ஏதாவது;
நல்லதோ கெட்டதோ
எதுவாயினும் சரி;
சொல்லிடு சகி;
பிரகாசிக்கும் உன்
பல்லிலிருந்து
புறப்படும் ஒளி
கருத்து இருக்குமென்னைக்
கவர்கிறது;
காதலியே,
குயிலைப் போன்றுன்
குரலைக் கேட்க ஆசை;
அழகான உன் முகத்தில்
அமைந்துள்ள
அதரத்தில்
அமுதருந்த
ஆசை;
அன்பே,
எல்லாவற்றுக்கும் நானே காரணம்
என்ற உன் கோபத்தைத் தூர
எறி;
காதல் நெஞ்சம்
கனலாய்க்
கொதிக்கிறது
காப்பாற்றிடு;

அருகருகே பற்கள்
அழகாய் அமைந்த என்
அன்பே, உன்
கோபம் இன்னும்
குறையாதிருந்திடின்
உன் நீண்ட
விரல் நகங்களால் என்
உடலைக் காயப்படுத்திடு - இல்லை
உன் வளைகரங்கள் கொண்டு எனைக்
கட்டிப்பிடித்திடு;
பல்லால் கடித்துக் கிழி
என்னை, அப்படியுமில்லை எனில்
எப்படிச் செய்தால் மகிழ்ந்து,
எல்லாம் மறந்து,
என்னோடு நீ இணங்கி இருப்பாயோ
அதைச் செய்;
எது எப்படியோ
என் அன்பே,
எல்லாவற்றுக்கும் நானே காரணம்
என்ற உன் கோபத்தைத் தூர
எறி;

Wednesday, July 27, 2011

ஜெயதேவா - கீதா கோவிந்தம் - 9

ராதைக்கு தோழியின் ஆலோசனை

ராதே,
கண்ணன் மீது
கொண்ட கோபத்தால் சண்டையிட்டு,
காமனை எதிர்கொள்ள முடியாது
கலங்கிநிற்பவளே,
காதல் கோட்டை இடித்தவளே,
கவலையே சூழ்ந்திருப்பவளே,
இத்தனைக்கு இடையிலும்
கண்ணனின் துரோகத்தை
எண்ணியே இருப்பவளே,
சண்டைக்குப்பின் சமாதானம் கொள்.
உன் தோழி நான்
உரைப்பதைக் கேள்;

முட்டாள் பெண்ணே, உன்
முட்டாள்தனத்தை வெளியே
காட்டாதே;
எக்காலம்
உன்காலமோ
அக்காலம்
உனைத் தேடி
வருகிறான்
உன் கண்ணன், இதைத்தவிர
வேறென்ன வேணும் உனக்கு ?

பனை மரத்தின்
பழங்களை விடப்
பெரியதும்,
பானை போன்று
பருத்ததுமானது உன் மார்
பகங்கள், அதைப்
பயனற்றுப்
போக விடலாமா ?
இதைத் தவிர
வேறென்ன வேணும் உனக்கு ?

முட்டாள் பெண்ணே,
மாதவனிடத்திலிருந்து
மறைந்து விலகி நிற்க நினையாதே;அவன்
மிகவும் இனிமையானவன்;
எத்தனை முறை நான்
இதை உன்னிடம்
சொல்லிருப்பேன்;
ஏனிதை ஏற்க
மறுக்கிறாய்;

இப்படியே நீ
செய்வாயானால்
எப்பொழுதும் அழுது
வாழ்கை எனும் கடலில்
மூழ்கிட நேரிடும்; தீர்க்கமான ஒரு
முடிவெடுக்க
முடியாது திணறும்
முட்டாள் பெண்ணே;
நம் தோழியரெல்லாம்
நகைக்கின்றனர் உன்
நிலை பார்த்து;

அமைதி கொள்; கண்ணனை
அனுசரித்துச் செல்; புதிதாய்
மலர்ந்த தாமரை
மலர் போல், எல்லாம்
மறந்து கண்ணனை
நேசி;
உன் வேதனைகளுக்கு
விடை கிட்டும்;

கண்ணன் வருகிறான்;
இதமாய்ப் பேசுகிறான்; பின்னெதற்கு
இத்தனை துன்பப்படுகிறாய் ?

ஜெயதேவா - கீதா கோவிந்தம் - 8

Wednesday, July 20, 2011

ஆண்டாள் திருமொழி - திருமணக்கனவு 9,10

   வரிசிலை வாள்முகத் தெனனைமார் தாம்வந்திட்டு,
   எரிமுகம் பாரித் தென் னைமுன்னே நிறுத்தி,
   அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
   பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழீநான்.

என் சகோதரர்கள்
அக்னி வளர்த்து
என்னை முன் நிறுத்திப் பிரார்திப்பதாயும்,
என் கையை
என் கண்ணன் கை மேல் வைப்பதாயும்,
பொறி வைத்துத் தீ வளர்த்துப்
பிரார்த்தனை செய்வதாயும்,
கனாக் கண்டேன் தோழி.

   குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
   மங்கள வீதி வலம்செய்து மணநீர்,
   அங்கவ னோடு முடன்சென்றங் கானைமேல்
   மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழீநான்.

எங்கள் உடலில்
குங்குமமும்,
சந்தனமும்
அப்பி எங்களைக்
குளிர்விப்பதாயும்,
மங்கள நீரால்
எங்களைக்
குளிப்பாட்டுவதாயும்
என்னையும்
என் மன்னனையும்
அழகான யானை மேல்
அமர்த்தி
அலங்கரிக்கப்பட்ட
வீதி வழியே
அழைத்துச் செல்வதாயும்
கனாக் கண்டேன் தோழி.

ஆண்டாள் திருமொழி - திருமணக்கனவு 6,7,8

   மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத,
   முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்,
   மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து, என்னைக்
   கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

மங்கள வாத்தியங்கள்
ஒலி எழுப்ப,
சங்கு முழங்க,
முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட
பந்தல் கீழ்,
மதுசூதனன் என்
உள்ளங்கை பற்றக்
கனாக் கண்டேன் தோழி.

   வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
   பாசிலை நாணற் படுத்துப் பரிதிவைத்துக்,
   காய்சின மாகளி றன்னானென்கைப் பற்றித்,
   தீவலம் செய்யக் கனாக்கண்டேன் தோழீநான்.

நன்மக்கள் மந்திரம்
நயமுடன் சொல்ல,
நன்றாய் அக்னியை வளர்க்க
மரக்கட்டைகளை
அதன் மேல் வைப்பதாயும்,
கண்ணன் கோபக் கொண்ட
களிறு போலருகே வந்து, என்
கை பற்றி தீயை வலம் வருவதாயும்,
கனாக் கண்டேன் தோழி.


   இம்மைக்கும் மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
   நம்மை யுடையவன் நாரய ணன்நம்பி,
   செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி,
   அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.

இந்தப் பிறவியிலும்,
இனி எல்லாப் பிறவியிலும்,
நமைக் காக்கும்
நம் நாராயணன் தன்
சிவந்தத் திருக்கரத்தால்
என் கால் பற்றி
அம்மி மேல் வைக்கக்
கனாக் கண்டேன் தோழி.

ஆண்டாள் திருமொழி - திருமணக்கனவு 3,4,5

   இந்திர னுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
   வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து
   மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை,
   அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீநான்

இந்திரனும் மற்ற தேவர்களும்
வந்திருந்து என்னை
நாராயணனுக்கு
மணமுடிக்கப் பேசுவதாயும்,
மறைவாய் நடக்கும்
பேச்சு வார்த்தைகள்
நடப்பதாயும்,
கிருஷ்ணனின் தங்கை
துர்க்கை
எனக்கு
கூரைப் புடவை உடுத்த
உதவி செய்வதாயும்,
வாச மலர்கள் பல
மாலையாகச் சூட்டி
என்னை
அலங்கரிப்பதாயும்
கனாக் கண்டேன் தோழி.


   நால் திசை தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கிப்,
   பார்ப்பனச் சிட்டர்கள் பல்லா ரெடுத்தேத்திப்
   பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னைக்,
   காப்புநாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீநான்.

எல்லாத் திசைகளிலுமிருந்து
புனித நீர் கொணர்ந்திருப்பதாயும்,
பெரியோர்கள் மந்திரம் சொல்லி அதையென்
தலையில் தெளித்து ஆசிர்வதிப்பதாயும்,
அழகான மாலை
அணிந்து
அரங்கநாதன் - என்
அருகில் புனிதனாய் மடியோடு நிற்பதாயும்,
எங்கள் கரங்களில் காப்பு கட்டப்பட்டு
இருப்பதாயும்
கனாக் கண்டேன் தோழி.


   கதிரொளி தீபம் கலச முடனேந்திச்,
   சதிரிள மங்கையர் தாம்வந் தெதிர் கொள்ள,
   மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
   அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீநான்

இள மங்கையர்
பலர்
பகலவன் ஒளியாய்ப்
பிரகாசிக்கும் தீமமேந்தி,
தங்கக் கலசமேந்தி
வருவதாயும்,
மதுரை ஆள்
மன்னன் அடிதொட்டு
வணங்கி வரவேற்பதாயும்,
புவி அதிர
அவன் உள்புகுவதாயும்
கனாக் கண்டேன் தோழி.

ஆண்டாள் திருமொழி - திருமணக்கனவு 2

     நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
     பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
     கோளரி மாதவன் கோவிந்த னென்பான், ஓர்
     காளைப் புகுதக் கனாக் கண்டேன் தோழீநான்


நாளை திருமணநாளென்றும்,
பாக்கு மரப்
பந்தலின் கீழ்
திருமண ஏற்பாடுகள் நிகழ்வதாயும்,
மாதவன் கோவிந்தானென்ற பெயர் கொண்டக்
காளையொருவன் பந்தலுள் புகுவதாயும்
கனாக் கண்டேன் என் தோழி.

Tuesday, July 19, 2011

ஆண்டாள் திருமொழி - திருமணக்கனவு 1

     வாரண மாயிரம் சூழ வலம்செய்து,
     நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
     பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
     தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீநான்


ஆயிரம் யானைகளுடன்
அழகாய் நாராயணன்
அணிவகுத்து வருவாதாயும்,
அவனெதிரே
அவனை வரவேற்கப்
பூரண மரியாதையுடன்
எல்லாரும் நிற்பதாயும்,
நம் வீதி எங்கும்
தோரணம் கட்டி
இருப்பதாயும்
கனாக் கண்டேன் என் தோழி.

Monday, July 18, 2011

எல்லாம் மறந்தாச்சி

எல்லாத்திறமைகளையும் - நாம்
என்றோ மறந்தாச்சி;

பணமே பெருசாச்சி;
பழமை எல்லாம் துறந்தாச்சி;
காடெல்லாம்
வீடாச்சி;
வீடெல்லாம்
காசாச்சி;

வயலில் உழைத்தது மறந்தாச்சி;
எல்லாக் கலைகளையும்
என்றோ
ஏற்றுமதி செய்தாச்சி;
அவன் தந்த பிச்சைக்காசை
பெரிதாய்ப் பார்க்கத் தொடங்கியாச்சி;
பொருள் உற்பத்தி மறந்து,
பணம் கொடுத்து
பொருள் வாங்கப் பழகியாச்சி;
மூலம் நமதென்பதை
மறந்து ரொம்ப நாளாச்சி;
பணம் ஒன்றே எல்லாவிடமும்
பரவியாச்சி;

எல்லாவற்றுக்கும்
எவனையோ
எதிர்பார்த்து
ஏமாந்துப்
பழகியாச்சி;

சுற்றுச்சூழலை
பாதிக்கும்
தொழிலெல்லாம் நம்மிடம்;
அதனால் கெடுவதெல்லாம்
நம் நாடு;
காற்றெல்லாம் கந்தகம் - நம்
கனவெல்லாம் கருப்பு;

ஒன்றும் புரியாது
ஒதுங்கிக்கிடக்கிறோம்;
ஒன்றாய் இணைந்து வாழ
மறந்துக்கிடக்கிறோம்;

மிச்சம்
இருப்பதென்னவோ
பணமும்,
உயிரும்
மட்டுமே;

வந்தே மாதரம் !!!

ஆண்டாள் திருப்பாவை - பகுதி 3

கீச்சு
கீச்சு என்று
கத்தும்
குயில்களின்
குரல்கள்
கிருஷ்ணா
கிருஷ்ணா என்றே
நமக்குக்
கேட்கிறதே,
இந்தப் பேச்சின்
ஆரவாரம்
கேட்கவில்லையோ
பெண்ணே,
இன்னும்
உறங்கிக்கிடக்கிறாயே ?
கை வளையல்களும்,
தாலிச் சரடும்
கலகலக்க
கூந்தல் நறுமணம் வீச
நம் குலப் பெண்கள்
மத்தினால் தயிர் கடையும்
ஓசை நீ கேட்கவில்லையோ,
பிள்ளாய் ?
நாராயண மூர்த்தியின்,
அந்தக் கேசவனின்
புகழ் நாங்கள் பாடையில்
படுத்துக் கிடக்காயே,
கதவு திறந்து
வெளியே வாராய் !!!



கீழ் வானம்
வெளுத்துவிட்டது;
எருமைகளெல்லாம்
மேயச்சென்றுவிட்டன;
மற்ற நம் தோழியரை எல்லாம்
போகாது தடுத்து
உன்னை எழுப்பக் கூடி
வந்துள்ளோம்.
எழுந்திராய்ப் பாவையே;
பாடி நாம் நம்
மாதவனை,
வாய் பிளந்து
மல்யுத்தம் செய்தவர்களை
வீழ்த்தியவனைச்
சேவித்தால்
நமக்கிரங்கி
அருள் செய்வான்;
விரைந்து நீ
வாராயோ !!!


தூய மணிமாடம்
சுற்றி விளக்கெரிய
நறுமணமெங்கும் பரவ
துயில் கொண்ட என்
மாமன் மகளே,
எழுந்திராய்;
மாமி, அவளை
எழுப்புவீர்களா ?
உங்கள் மகள்
ஊமையா,செவிடா ?
ஆனந்தமாய் உறங்குகிறாளா ? இல்லை
மந்திரத்தால்
மயங்கிக்கிடக்கிறாலா ?
மாயவன், மாதவன், வைகுந்தன்
போன்று அவன் பல்வேறு நாமங்கள்
சொல்லியே வாழ்ந்திடுவோம்,
வாராயோ !!!

Sunday, July 17, 2011

ஆண்டாள் திருப்பாவை - பகுதி 2

மழை தரும்
வருணனே !
எங்களைக்
கைவிடாய்;
கடலுள் புகுந்து
நீர் முகர்ந்து
கண்ணனின் கருத்த நிறம் போல்
கருமேகமாய் மாறி,
பத்மநாபன் கைச்சக்கரம் போல்
மின்னி,
வலம்புரிச்சங்கு போல்
சத்தமெழுப்பி,
சாரங்கன் வில் போல்
தாமதிக்காது
சரமழையாய்ப்
பூமியில் பெய்து
உலகில் எல்லாரும் வாழ்ந்திட
வழி செய்வாய்,
நாங்களும் மார்கழி
நீராடி
மகிழ்ந்திடுவோமே !!!


மாயவித்தை பல செய்யும் நம்
மன்னவனை,
மதுரை வாழ் மைந்தனை,
தூய்மையான யமுனையின் தலைவனை,
ஆயர்குலத்தின்
அணி விளக்காய்
அமைந்தவனை,
தாய்க்குச் சேயாய்ப் பிறந்த
தாமோதரனை,
தூய்மையாய் நீராடி வந்து
தூய மலர் தூவித் தொழுது,
புகழ் பாடி, சிந்தித்திருந்தால் - நம்
பிழை எல்லாம்
பொருத்தருள்வான்,
பின்னாளில் தோன்றும்
தீயவைகளைத்
தீயில்
தீய்த்து
துன்பம் நேராது
துணையிருப்பான்.
இதை உன்
எண்ணத்தில்
கொள்வாய் !!!

பறவைகள்
புறப்பட்டன கூவியே,
பார்க்கவில்லையோ நீ ?
பிள்ளாய் எழுந்திடு;
பேயாய் வந்தவளைக்
கலங்கடித்து
வீழ்த்தி,
பாம்பே பாயாய்ப்
பாற்கடலில்
படுத்துறங்கும்
பரமனைத் தன்
உள்ளத்தில் கொண்டு
முனிவர்களும் யோகிகளும்
அரி என்ற அவன் நாமத்தை
மெல்ல ஓதுவது
உள்ளம் குளிர்விக்கும் - இதை
உணர்ந்து நீ
எழுந்து வாராய் !!!

Friday, July 15, 2011

ஆண்டாள் திருப்பாவை - பகுதி 1

மார்கழி மாதம்,
பௌர்ணமி புலர்ந்த
புதிய தினம்.
நீராடச் செல்வோம், வருவீரோ
அணிகலன் பல
அணிந்த,
ஆயர்பாடியில் வாழும்
அன்புத் தோழியரே ?
கூர்வேல் கொண்டு
தொழில் செய்யுமந்த,
நந்தகோபாலன்
குமரன்,
யசோதையின்
இளஞ்சிங்கம்,
கருமுகில் நிற
மேனியன்,
அழகான கண்ணுடையவன்,
சூரிய ஒளி போன்று
பிரகாசிக்கும்
முகமுடையவன்,
நம் எல்லா விருப்பங்களையும்
நிறைவேற்றும்
அந்த நாராயணன்
புகழ் பாடியும்
கேட்டும்
நினைத்தும்
கிடப்போமே,
வாராய் !!!


உலகத்தில் நல்
வாழ்வு வாழ்வோரே,
எம் இறைவனுக்கு
நாங்கள் செய்யும்
பணிவிடைகள்
கேளாய்;
அதிகாலை குளித்து
பாற்கடலில்
பள்ளி கொண்டுள்ள
பரமனைப் பாடி;
நெய் தொடாது,
பால் பருகாது,
கண்ணில் மை தீட்டாது
மலர் சூடாது
செய்யக்கூடாத எதையும்
செய்யாது,
பிறர் மேல்
பழி சொல்லாது,
தேவையற்ற விவாதம்
துறந்து,
நாலு பேருக்கு உதவி,
அன்னமிட்டு
நல்ல வழி
உணர்ந்து
ஆராய்ந்து
வாழ்வோமே,
வாராய் !!!


உயர்ந்து
உலகை அளந்த
உத்தமன் புகழ் பாடி,
நித்தம் நீராடி
நம் இறைவனை
துதித்திருந்தால்
எந்தக் குறையுமின்றி
எல்லா மாதமும்
மழை பொழிந்து,
செந்நெல் வயல்கள்
உயர்ந்து வளர,
மீன்கள் துள்ளிக் குதித்து
விளையாட,
மலர்கள் தோறும்
வண்டுகள் தேன் ரசித்துக்
குடித்து பாடி வலம்வர,
பசுக்களின் காம்புகள்
பால் நிரம்பி வழிய,
நீங்கா செல்வம்
நிறைந்திருக்குமே
எந்நாளும்,
இதை எண்ணத்தில்
கொள்வாய் !!!

Tuesday, July 12, 2011

திருவெம்பாவை - மாணிக்க வாசகர் 3/3

மானே,
'நாளை உங்களை
நானே உறக்கத்திலிருந்து
எழுப்புவேன்' என்று நேற்றுரைத்தாய்.
அவ்வாறு சொன்ன சொல்லுக்கு
வெட்கப்படாது இன்னும்
விழிக்காது உறங்கிக்கிடக்கிராயே,
பொழுது விடியவில்லையோ ?
வையத்திலிருப்போரும்
வானிலிருபோரும்
அறிவதற்கு அருமையானவன்,
தானே வந்து
நம் எல்லாரையும் ஆட்கொண்டவன்,
அவனைப் பாடிப் பரவசமடையும்
எங்களைக் கண்டும்
வாய் திறவாது
உடல் உருகாது
உறங்கிக் கிடக்கிறாயே ?
எல்லார்க்கும் தலைவனாய்
எழுந்தருளியிருப்பவனை
எங்களோடு இணைந்து பாடிட
எழுந்து
வருவாய்.


ஒப்பற்றவனும்
பெரும்சிறப்புமுடைய எம்
பெருமானின்
புகழ் பாடும் சங்குடன்
சிவசிவ என்ற சொல் சொல்லியே
வாய் திறப்பாய்;
தென்னவன் முன்னே
மெழுகாய் உருகுவோர் பலர்,
அவனை
அரசனென்றும்,
அவனே பெருந்துணைவனென்றும்,
இன்னமுதனென்றும்
பலவிதமாய்ப்
புகழ்வதுண்டு;
காது கொடுத்து
கேட்பாயாக;
இன்னும் உறங்கிக்கிடக்கிராயே;
கல்நெஞ்சக்காரியே,
தூக்கத்தின் பலன்
என்னதானென்று
எடுத்துரைப்பாய்.


சேவல் கூவ,
மற்ற பறவைகள்
குரலெழுப்ப,
வாத்தியங்கள் இசைக்க,
வெண்சங்கு முழங்க,
ஒப்பற்ற
ஒளிப்பிழம்பான
கருணையே வடிவான
சிவபெருமானது
நிகரில்லாப்
புகழைப்
பாடினோம்;
கேட்கவில்லையோ அவற்றை ?
உறங்கிக்கிடக்கிறாயே !
பாற்கடலில்
பள்ளி கொண்ட
பெருமான்
நம் இறைவனிடத்தில்
அன்பு கொண்டதும்
இப்படித்தானோ ?
பேரூழியின் இறுதியில்
தலைவனாய் நின்றவனை,
ஏழைகளின் நண்பனை,
உமை பாகனைப்,
பாடுவாய்.

Monday, July 11, 2011

திருவெம்பாவை - மாணிக்க வாசகர் 2/3

"முத்துப் போன்ற
பல்லுடையவளே,
இன்னும் நீ விழிக்காது
இருப்பதேனோ ?"
"கிளியாய்க்
கொஞ்சிப் பேசும்
எம் தோழியர்
எல்லாரும் வந்தாச்சோ ?"
"எண்ணிச் சொல்வோம் இக்கணமே,
எனினும் அதுவரையில் நீ
கண் மூடிக் கிடந்து
காலம் போக்குவது வீணே,
தேவர்கட்கு
ஒப்பில்லா அமுதம் தந்தவனை,
எல்லா வேதத்திற்கும் விழுதானவனைக்,
கண்ணுக்கு இனியக்
காட்சி தருபவனைப்
புகழ்ந்துப் பாடிக்
கசிந்துருகையில்
வேறேதும் பேசமாட்டோம்,
நீயே வந்து
எண்ணிக்கொள்வாய்,
எண்ணிக்கை குறைவெனில்
மீண்டும் உறங்கச் செல்வாய்".

திருமாலும்
நான்முகனும்
அறியமுடியா
திருமுடியையும்,
திருவடியையுமுடைய
அண்ணாமலையானை
நானறிவேனென்று
தேன்போல் பொய்பேசும்
வாயுடைய வஞ்சகியே,
வாயிற்கதவு திறவாயோ ?
இவ் உலகத்தினரும்,
வானுலகத்தினரும்
அறிவதற்கு அருமையான
அவனது அழகை,
நம் குற்றங்களை மன்னித்து
நமக்கு அருளளிக்கும் அவன்
பெருங்குணத்தைப் பாடி
சிவனே சிவனே என்று
அவனையே சிந்தித்திருப்பவர்களை
நீ அறியாயோ ?
துயில் நீங்காதிருக்காயே
இன்னும்,
இதுதானா நீண்ட கூந்தலுடைய
பெண்ணே உன் தன்மை ?
சொல்வாய்.