Friday, October 13, 2017

பொன்மாலைப் பொழுதில் - 2

கோவில்ச் சிலையழகும்
திருவாரூர்த் தேரழகும்
தோகை விரித்தாடும் மயிலழகும்
ராஜா ரவிவர்மாவின் உயிரோவிய அழகும்
இத்தனையும் இணைந்தும்
ஈடாகா,
வஞ்சியுந்தன் பேரழகை
*என்னவென்று சொல்வதம்மா*
---
நாய் கூட நாடாத உன்னை
நாடே நோட்டமிடுவதாய் நம்புவாய்
நீயே, நீயாகவும் அவளாகவும் மாறி மாறிப் பேசிக் கொள்(ல்)வாய்
அவளருகில் இல்லாப்பொழுது
சகாரா பாலைவனத்தில்
சாகக்கிடப்பதாய் உணர்வாய்
கூட இருந்தாலோ
கூவம் நதிக்கரையும்
தேன் பாயும் தேம்ஸ் நதியாய்த் தோன்றும்.
எல்லாம்
*காதல் ... மயக்கம்*
---
விடிந்ததும் விலகி, மீண்டும் வருகிறது இரவு
உண்டதும் மறைந்து, மீண்டும் எடுக்கிறது பசி
வெட்டியதும் உடைந்து, மீண்டும் வளர்கிறது நகம்.
நான் கண்டது கனவா? இருக்கட்டும்
நாளையும் நீ ... கனவிலாவது
*மீண்டும் மீண்டும் வா*
---

என்ன வேலையினிடையில்  இருந்தாலும்
எத்தனை குழப்பங்கள் என்கூட இருந்தாலும்
கண்மூடிக் கொஞ்சமுனை நினைத்தாலோ
நெஞ்சில்
*ஆனந்த யாழை மீட்டுகிறாய்*
---
பிரிந்துதான் போனோன்
மறந்தா போனேன் ?
விலகித்தான் இருக்கிறேன்
வெறுப்புடனா இருக்கிறேன் ?

சரி சரி
*மறுவார்த்தை பேசாதே*
---
நிறைய உழைத்துக் களைத்திருப்பாய்
மனதில் பாரம் சுமந்து ஓய்ந்திருப்பாய்
மடியில் தலை சாய்த்து உறங்கிடு
*ஆரிரோ ஆரிரோ
சொல்லவோ பாய்போட்டு*
---
பார்த்துப் பேசி பழகியதும்
சிரித்து ரசித்து உருகியதும்
ஆடிப் பாடி திரிந்ததும்
இன்று நினைத்து பார்த்தாலும் ...
*லேசாப் பறக்குது மனசு*
---
என்ன வேண்டுமென்றேன்
ஏது உன் ஆசையென்றேன்
ஏதாவது இன்றாவது சொல்லென்றேன்
ஏந்திழையாள் வாய் திறந்தாள்
*ஒன்றா இரண்டா ஆசைகள்*
---
கண்ணடுத்தாய்
கிச்சுகிச்சுமூட்டினாய்
தோளில் தலை சாய்த்தாய்
போகனுமென்கிறாயே
*இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதா என்ன?*
---
இடியாய் இடித்து மேகம் பேச
மெல்லக் கூவி குயில் பேச
பூவே, பூவைப்போன்ற பூவையே,
*மலரே, மௌனமா ?*
---
கண்படு தூரத்தில் இல்லை
பேசவும் வாய்ப்பில்லை
 கவலையில்லை
 என்னுள்ளே தானே நீ,
*கனவாய்! காற்றாய்!*
---

பொன்மாலைப் பொழுதில் - 1

இன்று இத்தினம் என்னோடு உன் புறப்பாடு
நெஞ்சில் எதற்கு அய்யப்பாடு
எழுந்து வா துணிவோடு
மரங்கள் சூழ்ந்து பூக்கள் நிறைந்த ஒரு காடு
இடையில் நமக்கென்றோர் வீடு
நாமிருவர் மட்டும் தங்க ஏற்பாடு
குயிலோசைக்கேற்றார் போல் நீ பரதம் ஆடு
கூடவே *மனசு மயங்கும் மௌனகீதம் பாடு*
---
இது பின் மாலை நேரம்
அந்தி மெல்ல ஆடி வரும் நேரம்
கண்களால் பேசமுடியாத நேரம்
விரல்கள் விளையாடத் துவங்கும் நேரம்
முல்லை மலரும் நேரம்
ஆதவன் மாயும் நேரம் 
*நிலாக் காயும் நேரம்*
---

நெஞ்சின் இறுக்கம்
உனைக் கண்டால் இறங்கும்
உன் பார்வையில் தெய்வீகம்
என் நெஞ்சில் அதன் அனுக்கிரகம் 
அனவரதமும் உன் ஞாபகம்
சித்தம் சாந்தம்
நெஞ்சிலோர் நிசப்தம்
மெல்ல ஒலிக்கும் சப்தம்
கேட்டால் மனதுள் உன்மத்தம்
நீ இசைக்கும் கீதம், காதல் வேதம்
*நீயொரு காதல் சங்கீதம்*
---
இருமினால் இங்குப் பார் என்று பொருள்
முறைத்தால் பேச்சை நிறுத்து என்று பொருள்
உள்ளங்கையைச் சொரிந்தால் பசிக்கிறது
என்று பொருள்
கால் விரலால் கால் விரலைத் தடவினால் ..... என்று பொருள்
இதைப்பற்றி நீ ஏதும் இதுவரை சொன்னதில்லையே
*ரகசியமாய் ரகசியமாய்ப் புன்னகைத்தால் பொருளென்னவோ ?*
---
தத்தை இவள் அழகைத்
தலைசாய்த்துப் பார்த்து ரசிக்கும் மயில்

பூவை இவள் மேனிவாசங்கண்டு
மெய்சிலிர்த்துப் போகும் பூக்கள் 

நங்கை இவள் நாட்டிய நடையழகை
நாணிக் கண்டு ரசிக்கும் அன்னம்
வஞ்சி இவள் கொஞ்சுபார்வை காண, நீயும்
வானம் விட்டு வாராயோ
*வண்ணம் கொண்ட வெண்ணிலவே*
---
மழையைத் தூதனுப்பி
மண்ணின் நலம் அறிந்துகொள்கிறது மேகம்
வேரைத்  தூதனுப்பி
நீரின் நலம் அறிந்துகொள்கிறது மரம்
துயரத்தைத் தூதனுப்பி
இறைநம்பிக்கையை நலம் விசாரிப்பான் இறைவன்.
இந்தப் பாடலை நான்  உனக்கனுப்பி ...
*நலம், நலமறிய ஆவல்*
---
சிரிக்கிறாய் சில நேரம்
சீறுகிறாய் சில நேரம்
அணைத்துக் கொள்கிறாய் சில நேரம்
ஆத்திரத்தில் விலகி நிற்கிறாய்
சில நேரம்
பனியாய் .... புயலாய்
நிலவாய் .... நெருப்பாய்
இன்னும்....இன்னும்
*மழையும் நீயே, வெயிலும் நீயே*

---

Monday, October 2, 2017

பிடிச்சிருக்கு

நெற்றி ஓரத்தில் வந்து விழும்
அந்த சில முடிக்கற்றை - பிடிச்சிருக்கு

கெட்ட வார்த்தை சொல்லிவிட்டாயோ?
நாக்கைக் கடித்துக் கொள்கிறாயே - பிடிச்சிருக்கு

கொட்டாவி விட்டபடி
வாயின் வாசலில் சொடுக்குகிறாயே - பிடிச்சிருக்கு

எதுவும் மறையவில்லையென்றாலும்
எல்லாப் பக்கமும் இழுத்துவிட்டுக் கொள்கிறாயே - பிடிச்சிருக்கு

மொத்தத்தில்
எல்லாமே பிடிச்சிருக்கு
நீ என் மனைவியாயில்லாததால்.

Monday, September 4, 2017

மழை

மழை 
இந்த மழை தான் 
இதே மழை தான் 
இந்த மழை நாளில் தான் ஒருநாள் 

கோபமாய் வந்தாள் 
அமரச்சொன்னேன், 'பேசாதே' என்றாள்
கைக்குட்டை தந்தேன், 'தொடாதே' என்றாள் 
'கோபமா ?' என்றேன், 'நிறைய' என்றாள் 

தேநீர் தந்தேன் மெல்ல அருந்தினாள்
வெல்லப்பார்வை என்மேல் வீசினாள். 

மின்சாரம் நின்றது, இருள் சூழ்ந்தது 
மின்னல் வெட்டியது, தயாராய் இருந்தேன் 
இடியிடிக்க அய்யோ என்றவள் அலர 
அருகிலிருந்து பிடித்துக்கொண்டேன்.
 
அந்நேரம் பார்த்து
'பனியோ ? பனியின் துளியோ? 
உன் இதழ் மேல் என்ன ?'  
'பனியோ? தேனோ ? நீ சுவைத்தால் என்ன?'
என்று பாடல் ஒலிக்க ... 
 
...
... 
 
இதே மழை தான் 
இந்த மழையில் தான் ஒருநாள்.

Friday, September 1, 2017

Sunday, August 20, 2017

எப்பொழுதும்போல் சிரித்து வைத்தேன்

சனிக்கிழமை காலை

தேவையில்லாதவற்றையெல்லாம் 

தேடி எடுத்து வண்டியில் நிரப்பிக்கொண்டேன்.

முதல் நிறுத்தம் பழைய பேப்பர் கடை
போட்டதுக்குக் கிடைத்தது இருபது ரூபாய்

வாங்கிக் கொண்டு
தொடர்ந்து செல்ல டைலர் கடை
தைக்கக் கொடுத்து
தைத்ததை வாங்கிக் கொண்டு

அடுத்து நின்றது கோதுமை வாங்க
அங்கேயே தள்ளுவண்டியில் வாழைப்பழம்

தொடர்ந்து சென்று குக்கர் ரிப்பேர்
கொஞ்ச தூரத்தில் காய்கறி கடை

அதற்கடுத்து யூ டர்ன்
மாவு மில்லில், வாங்கிய கோதுமையை மாவாக்கி என்னாச்சி போன வாரம் ரிப்பேருக்குக் கொடுத்த மிக்சி 
என்று கடைகாரருக்கு நினைவுபடுத்தி

எனக்குப் பிடிக்குமேயென்று சூடாய் வடை வாங்கிக்கொண்டு

வீட்டிற்கு வந்து 'இன்று நூறு ரூபாய் மிச்சம்' 

என்று சொல்லும் மனைவியிடம்

இருநூறு ரூபாய் பெட்ரோல் செலவு 

என்று சொல்ல முடியாது,

கவிதைக்குக் கரு கிடைத்த மகிழ்ச்சியில் 

சிரித்து வைத்தேன், எப்பொழுதும்போல்.